குறைவான விலையில் அறிமுகமான மஹிந்திரா ஸ்கார்பியோ N-Z8..! விவரங்கள் இதோ
மஹிந்தரா நிறுவனம் விலை குறைவான புதிய ஸ்கார்பியோ N-Z8 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்ட SUV காராக இது திகழ்கிறது. ஸ்கார்பியோ N-Z8 காரின் விலை ரூ.16.99 லட்சத்தில் தொடங்கி ரூ.18.99 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை வைத்து பார்க்கும் போது Z8 மற்றும் Z8L மாடலை விட இது விலை குறைவானது.
புதிய ஸ்கார்பியோ N-Z8 மாடலில் டபுள் பேரல் LED ஹெட்லைட், LED DRL, LED புரொஜெக்டர் ஃபாக் விளக்குகள், LED இண்டிகேட்டர் எனப் பல வசதிகள் உள்ளது. கருப்பு நிறத்தில் 17 இன்ச் அலாய் வீலும் இந்தக் காரின் சிறப்பம்சமாகும்.
காரின் கேபினுள்ளே பார்த்தோமென்றால் பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்திலான லெதர் கவர், அலெக்ஸா அமைப்பில் உருவாக்கப்பட்ட Adrenox கனெக்ட் உள்ளது. 8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ஸ் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகியவையும் உள்ளது. இதிலுள்ள Adrenox தொழில்நுட்பத்தின் மூலம் காரின் 60 வகையான செயல்பாடுகளை கனெக்ட் செய்துகொள்ள முடியும். இதுமட்டுமின்றி சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ போன்றவையும் உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷனில் புதிய ஸ்கார்பியோ N-Z8 மாடல் வருகிறது. கியர்பாக்ஸை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்துகொள்ளும் வசதி உள்ளது.
புதிய ஸ்கார்பியோ N-Z8 காரின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சினானது அதிகபட்சமாக 197 bhp பவரையும் 380 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. மற்றொரு 2.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சினானது அதிகபட்சமாக 173 bhp பவரையும் 400 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இரண்டு இஞ்சின்களுமே 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க்யூ கன்வெர்டருடன் வருகிறது.
SUV காரான மஹிந்தரா ஸ்கார்பியோ N-Z8 மாடல் குறைவான விலையில் இருப்பதால் நிச்சயம் இதன் சிறப்பம்சங்கள் பல வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் உள்ள கூடுதல் வசதிகள் என்று பார்த்தோமென்றால் நான்கு டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஆறு ஏர் பேக், FDD, MTV-CL போன்றவை உள்ளது.
இந்த கார் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள மஹிந்தரா ஷோரூம்களில் விற்பனைக்கு வருகிறது. இதற்கிடையில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்கார்பியோ N-Z8 கார்களின் உற்பத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்த போவதாக மஹிந்தரா நிறுவனம் கூறியுள்ளது.