ஓலா எலக்ட்ரிக் வாகனம் புக்கிங்கில் புதிய சாதனை – பிப்ரவரியில் மட்டும் இவ்வளவு பேர் முன்பதிவா?
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை உறுதி செய்கின்ற எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் எந்த அளவுக்கு வேகமாக நகர்ந்து வருகின்றனர் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ஓலா நிறுவனத்தின் விற்பனை குறித்த செய்தி.
கடந்த மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு 35,000 முன்பதிவுகள் வந்துள்ளன. இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் 42 சதவீத இடத்தை பிடித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களை மொத்தமாகக் கணக்கிடும்போது ஓலா நிறுவனத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்திற்காக 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். எலெக்ட்ரிக் வாகன இந்திய சந்தையில், தனியொரு மாதத்தில் ஒரு நிறுவனத்திற்கு வரப்பெற்ற அதிகபட்ச முன்பதிவுகள் அதுதான் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் S1 X 4kWh என்ற வாகனத்தை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த வாகனத்தில் உள்ள பேட்டரிக்கு 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான காலத்திற்கு வாரண்டி கொடுக்கப்பட்டது. ஓலா வாகனங்களுக்கான சர்வீஸ் செண்டர்களை 50 சதவீதம் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த காலாண்டில் 10,000 பாஸ்ட் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, எங்கும் கொண்டு செல்லத் தகுந்த வகையில் 3 கிலோவாட் திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜர் ஒன்றை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை ரூ.29,999 ஆகும்.
ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி அன்ஷுல் கந்தல்வால் இதுகுறித்து கூறுகையில், “எங்கள் வாகனங்களுக்கான முன்பதிவுகள் மற்றும் மார்க்கெட் ஷேர் ஆகியவை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். குறிப்பாக தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் மற்றும் நியாயமான விலையில் இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்து வருகிறோம். மார்க்கெட்டில் தொடர்ந்து மிக தரமான வாகனங்களை எங்களால் கொடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மார்க்கெட்டிலேயே பேட்டரிக்கு அதிகபட்ச வாரண்டி கொடுத்திருப்பது எங்களுடைய நிறுவனம் தான். 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான பயணம் அல்லது 8 ஆண்டு காலத்திற்கு வாரண்டி கொடுக்கின்றோம். எலெக்ட்ரிக் வாகன விற்பனை சார்ந்து இருக்கின்ற அனைத்து தடைகளையும் நாங்கள் தகர்த்தெறிந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் வாகனம் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதும், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருப்பதும் இதனை அதிகப்படியான வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கான காரணமாக அமைகிறது.