100வது டெஸ்ட் போட்டி.. Guard of Honour மரியாதையால் ஷாக்.. ரோகித்தை கட்டியணைத்து நெகிழ்ந்த அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 27 வீரர்கள் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருந்து 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இந்திய அளவில் பார்த்தால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை 507 விக்கெட்டுகளையும், 3,309 ரன்களையும் விளாசி இருக்கிறார். இந்திய அணியின் தரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு வருகிறார். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான அஸ்வின், இன்று வரையும் தீவிரமான உழைப்பால் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனை பாராட்டும் வகையில் தரம்சாலா மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு ஸ்பெஷல் கேப்பை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கி மரியாதை செய்தார். அப்போது அஸ்வினின் மனைவி ப்ரீத்தி மற்றும் அவரது 2 மகள்களும் உடனிருந்தனர்.
அந்த டெஸ்ட் கேப்பில் “100” என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்பின் 100வது டெஸ்ட் கேப்புடன் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வினுக்கு, இந்திய அணி வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்தனர்.
இதனால் நெகிழ்ந்து போன அஸ்வின், கேப்டன் ரோகித் சர்மாவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழக வீரர் ஒருவருக்கு முதல்முறையாக கார்ட் ஆஃப் ஹானரி மரியாதை அளிக்கப்படுவது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.