IND vs ENG : 100 டெஸ்ட் போட்டி.. 14வது வீரர் அஸ்வின்.. பட்டியலில் இருக்கும் 13 இந்திய வீரர்கள் யார்?
இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் குறித்த விவரங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக இதுவரை 314 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் இதுவரை 80 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமாக விளையாடிய பெருமையை பெற்றவர்கள். அதேபோல் இந்திய அளவில் 13 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் 14வது வீரராக இணைந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக 27 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார்கள். அதில் முரளி விஜய், ஸ்ரீகாந்த், சடகோபம் ரமேஷ், தினேஷ் கார்த்திக், பாலாஜி உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்த வீரர்கள். அதில் அதிகபட்சமாக முரளி விஜய் 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர்கள் அனைவரையும் கடந்து அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி சாதித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வின், இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகள் மற்றும் 3309 ரன்களை விளாசி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான ஆல்ரவுண்டர் அஸ்வின் என்று நிச்சயம் சொல்ல முடியும். இடதுகை பேட்ஸ்மேன்கள் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை சரிக்கு சமமாக வீழ்த்தயுள்ளவர்.
இந்த நிலையில் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த பட்டியலில் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் 2வது இடத்திலும், 134 டெஸ்டில் விளையாடிய விவிஎஸ் லக்ஷ்மண் 3வது இடத்திலும், 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனில் கும்ப்ளே 4வது டெஸ்டிலும், 131 டெஸ்டில் விளையாடிய கபில் தேவ் 5வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் 125 டெஸ்டில் விளையாடிய சுனில் கவாஸ்கர் 6வது இடத்திலும், 116 டெஸ்டில் விளையாடிய வெங்சர்கார் 7வது இடத்திலும், 113 டெஸ்டில் விளையாடிய கங்குலி மற்றும் விராட் கோலி 8வது இடத்திலும், 105 டெஸ்டில் விளையாடிய இஷாந்த் சர்மா 9வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் ஹர்பஜன் சிங், புஜாரா மற்றும் சேவாக் ஆகியோர் தலா 103 டெஸ்ட் போட்டிகளிலும், அஸ்வின் 100 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.