உடற்பயிற்சியின் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!
உடற்பயிற்சி செய்யும் பொழுது நெஞ்சு பகுதியில் ஒரு வித இறுக்கம் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமத்தை அனுபவித்துள்ளீர்களா? அப்படி என்றால் நீங்கள் உடற்பயிற்சியால் துண்டப்பட்ட ஆஸ்துமா (Exercise Induced Asthma – EIA) பிரச்சனையால் அவதிப்பட்டு வரலாம். இந்த பிரச்சனைக்கான அறிகுறி என்ன, அதனை எப்படி கண்டறிவது, சிகிச்சை போன்ற ஒரு சில விஷயங்களை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
முதலில் உடற்பயிற்சி மூலமாக தூண்டப்பட்ட ஆஸ்துமாவினால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இருமல்
நெஞ்சு பகுதியில் இறுக்கம்
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வீசிங்
வழக்கமான ஆஸ்துமாவை போல அல்லாமல் இது உடற்பயிற்சி செய்யும் பொழுது அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படலாம். இதுவரை ஆஸ்துமா பிரச்சனையினால் அவதிப்படாத தனி நபர்கள் கூட இந்த உடற்பயிற்சியினால் தூண்டப்பட்ட ஆஸ்துமா பிரச்சனையினால் பாதிக்கப்படலாம் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளில் ஏற்படக்கூடிய வீக்கம் காரணமாகவே இந்த உடற்பயிற்சி மூலமாக தூண்டப்பட்ட ஆஸ்துமா ஏற்படுகிறது. உடற்பயிற்சியின் போது வேகமாக சுவாசிப்பதால் காற்றுப் பாதையில் நீரிழப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. ஒரு சில நபர்களில் இது வீக்கத்தை ஏற்படுத்தி அதனால் உடற்பயிற்சியினால் தூண்டப்பட்ட ஆஸ்துமா அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
EIA ஏற்படுவதற்கான காரணிகள் :
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளில் இது அதிக அளவில் காணப்படுகிறது.
அலர்ஜி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் பெரும்பாலும் EIA காணப்படுகிறது.
ஆஸ்துமா பிரச்சினையினால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு EIA ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குளிர்ந்த வானிலை மற்றும் வறண்ட காலநிலை காரணமாக EIA தூண்டப்படலாம்.
EIA ஐ தவிர்ப்பதற்கு உதவும் சில வழிகள்:-
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உங்கள் வழக்கத்தில் வார்ம்-அப் ஐ சேர்க்கவும்.
உடற்பயிற்சியின் போது வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த காற்றை சுவாசிக்கவும்.
காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதியில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
உடற்பயிற்சியின் போது உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் உடற்பயிற்சி செய்வதே நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும். உங்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, என்னென்ன மருந்துகள் வழங்க வேண்டும் என்பதை மருத்துவர் உங்களுக்கு ஆலோசிப்பார். உங்களுக்கு நுரையீரல் செயல்பாடு சம்பந்தப்பட்ட சோதனைகள் செய்யப்படும்.
அதன் பிறகு உங்களுக்கு ஆல்புடரால் போன்ற மருந்துகள் அடங்கிய இன்ஹேலர்கள் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படலாம். அதனை தவறாமல் பின்பற்றுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். இதை மீறி நீங்கள் உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய மூச்சுத் திணறலை அலட்சியமாக கருதக்கூடாது. அதனால் மோசமான விளைவுகள் உண்டாகும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் இருங்கள்.