அடேங்கப்பா ஆஃபர்..! இன்று மாமியார் மருமகளுக்கு ஊட்டி விட்டால் பில் கட்ட தேவையில்லை..!
“மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்” என்ற பழமொழி சொல்வதை கேட்டிருப்போம்… அதன் அர்த்தம் என்ன தெரியுமா..? ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம்.
இன்னும் பல வீடுகளில் அம்மா, மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போரில் நைஸாக நழுவும் கணவர்கள் குறித்தும் கேள்வி பட்டிருப்போம்.இப்படி மாமியார் மருமகள் உறவு என்பது நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் சூழலில், மீண்டும் பழையப்படி மாமியார் மருமகள் உறவை வலிமைப்படுத்தி ஒற்றுமையை மேம்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியை தழைக்கச் செய்யும் வகையில் ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்று அசத்தலான போட்டி ஒன்றை நடத்தி வருகிறது.
ஈரோடு வேதா ரெஸ்டாரண்ட் அண்ட் கேட்டரிங் என்ற அந்த உணவகமானது, மார்ச் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தங்கள் உணவகத்திற்கு வரும் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட்டுகொண்டால் உணவுக்கான கட்டணமே கட்டத் தேவையில்லை என அறிவித்துள்ளது. ஐஸ்கிரீன், சூப், என எது வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம் ஆனால் என்ன ஒரு நிபந்தனை என்றால், மாமியாரும், மருமகளும் அவரவர் கையால் சாப்பிடாமல் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட வேண்டும் என்பதே. இது குறித்து கூறும் வேதா ரெஸ்டாரண்ட் உணவகத்தின் உரிமையாளர் பிரபு, தொடர்ந்து 6ஆவது ஆண்டாக இந்தப் போட்டியை நடத்தி வருவதாகவும், மகளிர் தினத்தை ஒட்டியும், குடும்ப ஒற்றுமையை மேம்படுத்த வேண்டியும் இந்தப் போட்டி தாங்கள் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.