வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப்..!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மக்களவை தேர்தலுக்காக 1.7 லட்சம் வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 93,000 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 99,000 விவிபேட் கருவிகள் தயாராக உள்ளன என்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளன என்றும் கூறினார்.

கூடுதலாக 20 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், வேட்பாளர்களின் அத்துமீறல்களை பொதுமக்கள் கண்காணித்து உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம் என்றும் புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *