சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க…
உலக மதங்களில் அதிக எண்ணிக்கையில் பெண் தெய்வங்கள் உள்ளதும் இந்து மதத்தில் தான். ஆணும் பெண்ணும் சரி பாதி என்பதை , ‘பெண்ணியம்’ என்ற சொல் கூட உருவாகாத காலத்தில் உலகுக்கு உணர்த்திய அவதாரமே அர்த்தநாரீஸ்வரர்.அகிலமெல்லாம் காத்து நிற்கும் எம்பெருமான் சிவனுக்கு சரிபாதியாக அமைந்திருப்பாள் அன்னை பராசக்தி. உமையொரு பாகன் தானே சிவ பெருமான்.
ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார். சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். பிருங்கி முனிவரின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்ற சிவ பெருமான் மூன்றாவது காலாக ஊன்று கோலினை பிருங்கிக்கு அளித்தார்.
ஊன்று கோல் கொடுத்த ஊக்கத்தினால் பிருங்கி முனிவர், சிவபெருமான் முன்பு , பக்தியும் நன்றியும் ததும்பத் ததும்ப ஆனந்த நடனம் ஆடினார். தன்னை மதிக்காத ஒரு முனிவரின் இத்தகைய செயல் அன்னை பார்வதியை வேதனையடையச் செய்தது, தான் சக்தி , சிவபெருமானின் சரி பாதி என்று உறுதி பூண்டு தவமிருந்தார். சிவபெருமான் தனது இணையாக அன்னை பார்வதியை , சரி பாதி உடல் கொடுத்து ஏற்றார். இந்த அவதாரமே பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர். இந்த காட்சியை கண்ட பிருங்கி முனிவர் , உமையொரு பாகனை வணங்கி வழிபட்டார்.
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல்
திகழ்மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள்
ஒருபாகம் அமர்ந்து அருளிக் கொந்து அணவும்
பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
என்று தேவாரப் பதிகங்களில் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற கொடிமாடச் செங்குன்றூர் சிவஸ்தலமே தற்போதைய திருச்செங்கொடு. இந்த திருக்கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த சிவஸ்தலத்தில் அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர்.
தேவ தீர்த்த பிரசாதம்
மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிக்கின்றனர். அம்பிகை தனியே இல்லாததால் இப்படி செய்வது இங்கு ஐதீகம். சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.
சதய நட்சத்திர நாளில் அபிஷேகம்
அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க அர்த்தநாரீஸ்வரரை வணங்கி அருள் பெறலாம்.
அம்மனும் அப்பனும் இணைந்து சரிபாதியாக அருள்பாலிக்கும் அர்த்த நாரீஸ்வரை வணங்கி அருள் பெறுவோம்.