48வது சதம்.. சாதித்த ரோகித் சர்மா.. 4 ஆண்டுகளில் ஹிட்மேன் தான் டாப்.. லிஸ்டில் கூட இல்லாத கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 12வது டெஸ்ட் சதத்தை விளாசி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இதனை தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. 52 ரன்களுடன் 2வது நாளினை தொடங்கிய ரோகித் சர்மா, அடுத்தடுத்து விரைவாக ரன்களை சேர்த்தார்.
மறுபக்கன் சுப்மன் கில்லும் அதிரடியாக ரன்களை குவிக்க, இந்திய அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. இங்கிலாந்து அணியை விடவும் இந்திய அணி முன்னிலை பெற்ற பின், ரோகித் சர்மாவின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஸ்டம்ப் லைனில் இருந்து பந்து கொஞ்சம் வெளியில் சென்றால் கூட, ரோகித் சர்மா பொளந்து கட்ட தொடங்கினார். டாம் ஹார்ட்லி மற்றும் பஷீர் இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திணறினர்.
இருப்பினும் 99 ரன்களை எட்டிய போது ரோகித் சர்மா சிறிய பதற்றம் கொண்டார். இதனால் மைதானத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹார்ட்லி பந்தில் எளிதாக ஒரு சிங்கிளை எடுத்து தனது 12வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இந்த சதத்தை எட்டிய போது ஹெல்மெட்டை கூட கழற்றாமல், அடுத்த பாலை எதிர்கொள்ள தயாரானது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 48வது சதம் இதுவாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும் ரோகித் சர்மா விளாசி இருக்கிறார். இதன் மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். அதேபோல் தொடக்க வீரராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து 43 சதங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் 49 சதங்களுடன் வார்னரும், 45 சதங்களுடன் சச்சின் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 4 சதங்களுடன் ரோகித் சர்மா சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் 6 சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.