வறுமை, குடும்ப சூழ்நிலைகளை தகர்த்தெறிந்து சாதித்த இந்தியாவின் ராக்கெட் பெண்கள்!
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக பல பெண்கள் அனைத்து சவால்களையும் கடந்து வந்து சாதனை படைத்துள்ளனர். அப்படி தடைகளை தகர்த்தெறிந்து இந்தியாவின் ராக்கெட் பெண்களாக உயர்ந்தவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
டெசி தாமஸ், டிஆர்டிஓ: கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவர். இவருக்கு 13 வயதாகும் போதே இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்ட நிலையில் கல்வி உதவித்தொகை மூலம் படிப்பை தொடர்ந்தார்.
திரிசூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் புனேவில் உள்ள ஆர்மாமெண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்தார். தற்போது டிஆர்டிஓ அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொது இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் முக்கிய திட்டமான அக்னி -IV திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டார்.
இந்தியாவில் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவர். அக்னி திட்டங்களில் பணியாற்றிய இவருக்கு இந்தியாவின் ஏவுகணை பெண் என்ற பெயரும் உண்டு. இவர் லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது பெற்றவர்.
ரிது கரிதால், இஸ்ரோ: லக்னோவை சேர்ந்த ரிது கரிதால் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை பொருட்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினார். படிப்பு மட்டுமே இவரை இஸ்ரோ வரை அழைத்து சென்றது என கூறலாம்.
லக்னோ பல்கலைகழகம் மற்றும் பெங்களூரு அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் படிப்பை முடித்தார். இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த ரிது கரிதால், 2013ஆம் ஆண்டு மங்கள்யான் திட்டத்தின் துணை செயல் இயக்குநராக பணியாற்றினார். செவ்வாய் கோளுக்கான ஆர்பிட்டரை வடிவமைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
சந்திரயான் -2 திட்டத்தின் இயக்குநராக பணி புரிந்தார். 2007ஆம் ஆண்டு இஸ்ரோ இளம் விஞ்ஞானி விருதினை ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து பெற்றவர்.
நிகர் ஷாஜி, இஸ்ரோ: தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால் ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியாற்றியுள்ளார். சூரியன் பற்றிய ஆய்வுக்காக இஸ்ரோ ஏவிய ஆதித்யா -1 திட்டத்தின் இயக்குநர் இவர்.
வறுமை, நமது குடும்ப சூழல் , பின்புலம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெண்கள் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ,மூன்று பெண்களே உதாரணம்.