அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்.. உணவு டெலிவரி செய்து ரூ.4.59 கோடி காரை வாங்கிய தீபிந்தர் கோயல்..!
சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அதிரடியான செயல்களுக்காக அடிக்கடி டிரெண்ட் ஆவார். இந்த முறை அவர் வாங்கி இருக்கும் கார் அவரை சமூகவலைதளங்களில் டிரெண்டாக்கியுள்ளது.
பல ஸ்டார்ட்அப் நிறுவனர்களை போலவே சோமேட்டோ நிறுவனரான தீபிந்தர் கோயலுக்கு புது வகையான கார்களை வாங்குவதில் விருப்பம் அதிகம். குறிப்பாக ஆடம்பர சொகுசு கார்கள் வாங்கி வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார் இவர்.
இவர் வீட்டு கார் பார்கிங்-ல் போர்சே 911 டர்போ எஸ், ஃபெராரி ரோமா, லம்போர்கினி யுரஸ் என சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார் தீபிந்தர் கோயல். தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒரு கார் இணைந்துள்ளது.
கார்டோக் அறிக்கையின் படி தீபிந்தர் கோயல், ஆஸ்டான் மார்டினின் DB12 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 4.59 கோடி ரூபாய் ஆகும்.
புது ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி மகிழ்ச்சி: ஆஸ்டான் மார்டினின் DB12 ஸ்போர்ட்ஸ் கார் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபப்ட்டது. இந்தியாவில் முதன் முறையாக இந்த காரை வாங்கிய நபர் தீபிந்தர் கோயல் என்பது தான் தற்போது வெளியாகி இருக்கும் செய்தி. இந்த புது காரின் படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் கார் நிறுவனமான ஆஸ்டான் மார்ட்டின் கடந்த செப்டம்பரில் இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாடின் மார்டின் ரேசிங் பச்சை நிறத்தில் , ஸ்டிலைஷாக இருக்கிறது இந்த கார். பெரிய 21 இன்ச் அலாய் சக்கரங்கள் கொண்டிருக்கிறது. தீபிந்தர் கோயலின் ஆஸ்டான் மார்டினின் DB12 கார் வெறும் 3.5 விநாடிகளில் 0இல் இருந்து 100 கிமீ வேகத்திற்கு மாறும் திறன் கொண்டது.
தீபிந்தர் கோயல் பஞ்சாப்பை சேர்ந்தவர், டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார். 2008ஆம் ஆண்டில் நண்பரோடு இணைந்து ஃபுட்டிபே எனும் உணவு ரேட்டிங் நிறுவனத்தை தொடங்கினார். 2015ஆம் ஆண்டில் அவர் சோமேட்டோ எனும் உணவு டெலிவரி நிறுவனத்தை தொடங்கினார். 2021ஆம் ஆண்டில் இது முதன்முறையாக பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
தற்போது தீபிந்தர் கோயலின் நிகர மதிப்பு 2,030 கோடி ரூபாய் ஆகும்.
ஸ்டார்ட் அப் தொடர்பான ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் தீபிந்தர் கோயல் சோமேட்டோ மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். குறிப்பாக பல்வேறு ஸ்டார்ட் அப்கள் வளர்ந்து வருவதற்கு காரணமாக இருந்துள்ளார்.