வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாத விஜயகாந்த்! 75 பேருக்கு ஆஃபிஸில் வேலை தந்தவர்! -கனிமொழி
வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாதவர் விஜயகாந்த் என்றும் 75 பேருக்கு அவரது ஆஃபிஸில் வேலை தந்தவர் எனவும் கனிமொழி எம்.பி.
புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்கும் நிகழ்வைத் துவக்கி வைத்து பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். மேலும், விஜயகாந்தின் மறைவு என்பது பேரிடியாக இருந்ததாக கூறினார். இது குறித்து கனிமொழி கூறியதாவது;
”எந்த உயரத்தில் இருந்தாலும் தான் ஒரு சாமானிய மனிதன் என்பதை எந்த காலத்திலும் மறந்திடாத மாமனிதர் விஜயகாந்த். விஜயகாந்த் அவர்களின் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டும் அல்லாமல், அவரை தெரிந்த எல்லோரும் பெரிய இழப்பு. எப்போதும் மக்கள் மீது அக்கறையும், எளியவர் மீது அக்கறையும், தனக்கு ஒரு காலகட்டத்தில் உதவி இருக்கக் கூடிவர்களை எந்த காலத்திலும் மறக்காத, அவர்களோடு உறுதுணையாக நின்ற மனிதர் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.”
”அவரது அரசியல் பயணம் என்பது கூட மக்கள் மீது அக்கறை இருக்கக்கூடிய, திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலகட்டத்தில் கூட சமூக உணர்வு, திராவிட உணர்வு, மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு இதே மையக் கருத்தில் தான் சொல்லிக் கொண்டு இருந்தது. அவரது வாழ்க்கையும், தமிழ் இனம் என்பதைத் தான் பற்றிக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், அவரை நாம் இப்போது இழந்து இருக்கிறோம்.”
” அவரோடு பழகக்கூடிய வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது. தலைவர் கலைஞர் மீதும், என்னுடைய தாயார் மீதும் மாறாது பற்று வைத்து இருக்கக்கூடிய நல்ல நண்பர். அவருடைய இழப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் , எனக்கு மிகப் பெரிய இழப்பு ஆகும். வேலை தேடி வர யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் தன்னுடைய அலுவலகத்தில் கிட்டத்தட்ட 75 பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுக்கக் கூடிய அளவுக்கு இளகிய மனதுக்கு சொந்தக்காரர் அவர். அவருடைய இழப்பு என்பது, அவரை தெரிந்த அத்தனை பேருக்கும் ஒரு பெரிய இடியாகத்தான் இருக்கும்.”