பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஆப்கானிஸ்தான் திட்டம்
ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியாவின் முக்கியஸ்தரான ஜே.பி. சிங், தலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை எதிர்ப்பதற்கான வழிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரச அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சந்திப்பு இடம்பெற்ற இடம் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
அரசியல் மற்றும் பொருளாதார உறவு
இந்நிலையில் சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், சபஹர் துறைமுகம் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்தவும் இந்தியா ஆர்வமாக உள்ளது என்று சிங் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்த முத்தாகி, இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை.
ஏனினும் ஆப்கானிஸ்தான் மண்ணை எந்த நாட்டிற்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.