இது தெரியுமா ? இருமல் மற்றும் சளி இருக்கும் போது கற்பூரவல்லி இலைச்சாற்றை கொதிக்கும் நீரில்…

சிரப், டானிக் வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் சளி, இருமலால் அவதிப்படும்போது கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற மருத்துவ குணம் நிறைந்த ஏராளமான பச்சிலைகளை இழந்து விட்டோம்’’ என கூறும் சித்த மருத்துவர் அபிராமி, கற்பூரவல்லியின் பெருமைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
.
‘‘பழங்காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதை முக்கிய வழக்கமாக கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்றுதான் கற்பூரவல்லி என்ற இந்தப் பச்சிலை. இச்செடி வீடுகளில் இயல்பாக வளரக்கூடிய தன்மை உடையது.
.
பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. ஏனென்றால், குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்துவிதமான உடல் நலக்குறைபாடுகளை சரி செய்யும் தன்மை இந்தப் பச்சிலைக்கு உள்ளது.
.
குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மாந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. வீட்டு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாகவே, ‘கல் போன்ற சளியைக் கரைக்கும் கற்பூர வல்லி‘ என்ற பழமொழி இன்றும் கிராமங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது’’ என்றவரிடம், கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தும் முறை பற்றிக் கேட்டோம்…
.
‘‘கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில் இருந்து வெளிப்படும் ஆவியில் பல தடவை காட்டி, அதில் இருந்து வடியும் சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு பருக தர வேண்டும்.
.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் புகட்டலாம். ஐந்தில் இருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது. இவ்வாறு தினமும் உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலை என இரண்டு வேளை கொடுத்து வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.

கைக்குழந்தைக்கு சளியும் இருமலும் இருந்தால் தாய்ப்பாலூட்டும் அம்மாக்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை மார்பில் கலந்து தடவலாம். குழந்தை பால் குடிக்கும் போது சாறு உள்ளே போகும்.குழந்தைகளுக்கு இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலைச்சாற்றை இரண்டு துளிகள் எடுத்து தலையில் தடவி வந்தால் இருமல் வராது. குளிர் அடக்கமாக இருக்கும்.

காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும் போது இதன் இலையை எண்ணெயில் பொரித்து அந்த எண்ணெயை தொண்டையில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளி இருக்கும் போது கற்பூரவல்லி இலைச்சாற்றை கொதிக்கும் நீரில் சேர்த்து ஆவி பிடித்து வந்தால் நிவாரணம் விரைவாக கிடைக்கும்.

பெரியவர்கள் இருமலை கொண்டிருந்தால் கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்துகொள்ள வேண்டும். இதன் இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காய்ச்சல் காலத்தில் கற்பூரவல்லி சாறு மட்டும் எடுத்தாலும் தொண்டைப்புண், சளி, இருமல் போன்றவை கட்டுப்படுத்தப்படும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் பெரியவர்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடலாம். கற்கண்டு சேர்த்தும் இலையை மென்று சாப்பிடலாம்.

மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம். வயோதிக காலத்தில் சர்க்கரை நோய் பொதுவாக காணப்படக்கூடிய பாதிப்பு என்பதால், முதியவர்கள் 5 இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லிகிராம் அளவு பருகலாம். இது மட்டுமில்லாமல் கற்பூரவல்லி இலையை உணவு பதத்திலும் சாப்பிடலாம்.
.
இம்மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். கடலை மாவில் இந்த இலையைத் தோய்த்து பஜ்ஜி செய்தும் உண்ணலாம். இந்த கற்பூரவல்லி சைனஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.

மூட்டுவலிக்கு கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.வயதானவர்கள் ஒரு வாரம் இதை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

வாரத்தில் 2 நாட்கள் இவற்றை உணவுக்குப் பின், எடுத்துக்கொண்டால் வாய் மற்றும் மூக்கு வழியாக சளி படிப்படியாக வெளியேறும். உணவுப்பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதோடு கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பதும் பயன் தரும்

கற்பூரவல்லி பாக்டீரியா தொற்றை வெளியேற்றும் தன்மை கொண்டது என்பதால் பல் சிதைவு, ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவல்லியை கைவைத்தியமாக பயன்படுத்தலாம். கற்பூரவல்லி இலைகளை பொடியாக நறுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை வாய் கொப்புளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற கற்பூரவல்லி இலைச்சாறை குழந்தைகளுக்கு மாலை அல்லது அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்துவந்தால் பூச்சிகள் வெளியேறும். குழந்தைகள் குடிக்க மறுத்தால் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த சாற்றை குடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கொடுக்க கூடாது.

வாய்வு பிரச்சனை இருந்தால் கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கலந்து தேனில் கலந்து சூடாக்கவும். இந்த கலவையை இறக்கி ஆறவைத்து இரண்டு முறை குடித்து வந்தால் பாலன் கிடைக்கும்.

கற்பூரவல்லி கை- கால் வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாகவே வழங்கப்படுகிறது. தேள் கடித்தவுடன் அவசர நிலைக்கு கற்பூரவல்லி சாற்றை மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.

தாய்ப்பாலூட்டும் பெண்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை குடித்தால் குழந்தைக்கு அதன் நன்மைகள் கிடைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *