IND vs ENG : 3வது நாள் ஆட்டம்.. ஃபீல்டிங் செய்ய வராத ரோகித் சர்மா.. கேப்டனாக செயல்படுவது யார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதுகில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஃபீல்டிங் செய்ய களமிறங்காது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்திருந்தது.
இதன் மூலமாக இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து 3வது நாள் ஆட்டத்தை குல்தீப் யாதவ் – பும்ரா கூட்டணி தொடங்கியது. இதில் குல்தீப் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து பும்ராவும் 64 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி மற்றும் ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. வழக்கம் போல் ஜாக் கிராலி – பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.
அவருக்கு பதிலாக ஃபீல்டிங் மாற்றங்கள் மற்றும் பவுலிங் மாற்றங்களை பும்ரா செய்து வந்தார். துணை கேப்டன் என்பதால் கேப்டன்சி பும்ராவின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், முதுகுபிடிப்பு காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 3வது நாள் ஆட்டத்தில் பும்ராவே முழுமையான கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அண்மை காலங்களில் ரோகித் சர்மா காயங்களில் சிக்காமல் சிறப்பாக ஆடி வந்த நிலையில், மீண்டும் காயத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.