IND vs ENG : குட்டி தோனியா இவரு.. கிராலியை வீழ்த்த ஜுரெல் கொடுத்த டிப்ஸ்.. தட்டித்தூக்கிய அஸ்வின்!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் கொடுத்த டிப்ஸ் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் 3வது நாள் ஆட்டத்தை 473 ரன்களுடன் இந்திய அணியின் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் கூடுதல் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், இருவரும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 477 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னிலை 259 ரன்களாக இருந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் – கிராலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா முதுகுபிடிப்பு காரணமாக ஃபீல்டிங் செய்ய களமிறங்காததால், பும்ரா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல் ஓவரை பும்ரா வீச, 2வது ஓவருக்கே அஸ்வின் கொண்டு வரப்பட்டார்.
அந்த ஓவரின் 5வது பந்திலேயே அஸ்வினை அட்டாக் செய்ய நினைத்து டக்கெட் க்ரீஸில் இருந்து வெளி வந்தார். ஆனால் அஸ்வின் பந்தை ஸ்பின் செய்யாமல் வீசியதை கணிக்காமல் பேட்டை சுழற்ற, அந்த பந்து நேராக ஸ்டம்பை தகர்த்து சென்றது. இதனால் டக்கெட் 2 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். பின்னர் வந்த போப் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் கிராலி, முதல் ரன்னை எடுக்க தடுமாறி வந்தார்.
15 பந்துகள் கடந்து கிராலி தனது முதல் ரன்னை எடுக்க முடியாமல் தவிக்க, அஸ்வின் பந்தை அவர் எதிர்கொள்ள தடுமாறியது தெளிவாக தெரிந்தது. இந்த நிலையில் 6வது ஓவரை வீச மீண்டும் அஸ்வின் வந்தார். முதல் பந்தை வீசுவதற்கு முன்பாக கிராலியின் மனநிலையை கணித்த துருவ் ஜுரெல், நிச்சயம் இந்த ஓவரில் வித்தியாசமாக ஏதேனும் செய்வார் என்று சத்தமாக கத்தினார். இதனை உணர்ந்து அஸ்வின் முதல் பந்திலேயே மிகப்பெரிய டர்ன் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் கிராலி ஷார்ட் லெக் திசையில் ரன்கள் சேர்க்க முயல்வதை அறிந்து லெக் ஸ்லிப் திசையில் சர்பராஸ் கானை ஃபீல்டிங் செய்ய நிறுத்தினார். சரியாக மூன்றாவது பந்தில் லெக் ஸ்டம்ப் திசையில் பந்தை வீச, அது கிராலியின் பேட்டில் அடித்து லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த சர்பராஸ் கான் கையில் புகுந்தது. அப்படியே ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியதை இந்த விக்கெட் நினைவுபடுத்தியது. துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணித்து ஆலோசனை கூறுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.