Sela Tunnel: 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீள இருவழி சுரங்கப்பாதை… திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடந்த ‘விக்சித் பாரத் – விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.₹ 825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள தேஜ்பூரை தவாங் பகுதியுடன் இணைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) 2019, பிப்ரவரி 9ம் அன்று சேலா சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

சேலா சுரங்கப்பாதை பற்றிய சில முக்கிய தகவல்கள்

1. சேலா சுரங்கப்பாதை 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும்.

2. பலிபாரா-சரிதுவார்-தவாங் சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், அனைத்து வானிலையிலும் போக்குவரத்து இணைப்பை வழங்க இந்த சுரங்கப்பாதை உதவும்.

3. இந்திய சீன எல்லையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 90 லட்சம் மணி நேரங்களுக்கும் அதிகமான வேலை நேரம் தேவைப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தினமும் சராசரியாக 650 தொழிலாளர்கள் இந்த சுரங்க பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4. சுரங்க கட்டுமானத்திற்கு தோராயமாக 71,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 5,000 மெட்ரிக் டன் எஃகு மற்றும் 800 மெட்ரிக் டன் வெடிபொருட்கள் தேவைப்பட்டன என கூறப்படுகிறது.

5. எல்லைபுற சாலைகள் அமைப்பின் (Border Road Organisation -BRO ) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் இரண்டு சுரங்கங்கள் மற்றும் ஒரு இணைப்பு சாலை உள்ளது. எண் 1 சுரங்கப்பாதை என்பது 980 மீட்டர் நீளமுள்ள ஒற்றை-குழாய் சுரங்கப்பாதையாகும், அதே சமயம் சுரங்கப்பாதை எண் 2 என்பது 1,555 மீட்டர் நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையாகும்.

6. இரு வழி சுரங்க பாதைகளில் ஒன்று போக்குவரத்து தேவைகளுக்காகவும், மற்றொன்று அவசரகால சேவைகளுக்காகவும் உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளுக்கு இடையேயான இணைப்புச் சாலை 1,200 மீட்டர் நீளம் கொண்டது.

7. சேலா சுரங்க பாதையில், காற்றோட்டத்திற்கு ஜெட் ஃபேன், தீயணைப்பு கருவிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக SCADA அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் போன்ற நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

8. சேலா கணவாய்க்கு கீழே 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சேலா சுரங்கப்பாதை குளிர்காலத்தில் கூட ஒரு முக்கிய பாதையை வழங்குகிறது. இந்தச் சுரங்கப்பாதையானது ராணுவ துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை விரைவாக சீன-இந்திய எல்லையில் கொண்டு செல்ல உதவுகிறது என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக நேற்று அஸ்ஸாம் சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று காலை காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் வனப்ப்குதியில் சஃபாரிக்கு சென்றார். முதலில் பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரில் யானை சஃபாரி செய்த, பின்னர் வனத்துறை அதிகாரிகளுடன் ஜீப்பில் சஃபாரி மேற்கொண்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *