ஆர்பிஐ நெருக்கடி..!! டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை..!!
சென்னை: டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும், டாடா குழுமத்தில் இயங்கி வரும் அனைத்து நிறுவனம், முதலீடுகள், வர்த்தகம் என அனைத்திற்கும் தலையாய உரிமை கொண்டாடுவது டாடா சன்ஸ்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகமும் வருகிறது, இந்த நிறுவனம் இதுநாள் வரையில் ஒரு தனியார் முதலீட்டு மற்றும் நிர்வாகமாக இயங்கி வந்தது. ஆனால் ஆர்பிஐ விதிமுறை காரணமாக டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் பங்குச்சந்தைக்கு வருவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கும் வேளையில், டாடா குழுமத்தின் முதலீட்டுப் பிரிவான டாடா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பங்குச்சந்தையில் மாஸ் காட்டி வரும் வேளையில் தற்போது டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வர உள்ளது.
அடித்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் டாடா சன்ஸ் IPO மூலம் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிறுவனம் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வரையில் மதிப்பிடப்படலாம் என அமெரிக்க ரிஸ் கேப்பிடல், வென்சர் கேப்பிடல் நிறுவனமான ஸ்பார்க் கேப்பிடல் கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒரு விதிமுறையைப் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் டாடா சன்ஸ் இருப்பதாக ஸ்பார்க் கேப்பிடல் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் செயல்படும் அனைத்து NBFC நிறுவனத்தின் அப்பர் லேயர் நிறுவனம் பங்குச்சந்தையில் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை விதித்தது.
இந்த நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர் லேயர் NBFC ஆக டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆர்பிஐ கடந்த ஆண்டு அடையாளம் கண்டது, இதன்படி செப்டம்பர் 2025-க்குள் என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.
ஸ்பார்க் கேப்பிடல் கணிப்பின்படி, டாடா சன்ஸ் லிமிடெட் சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதன் ஐபிஓ அளவு சுமார் ரூ.55,000 கோடி இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம் தனது 80% பங்குகளைத் தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும், எஞ்சியுள்ள 20 சதவீத பங்குகளை மட்டுமே பணமாக்கும். ஆனால் நிறுவனத்தின் மறுசீரமைப்புச் செயல்முறை நிறுவனத்தின் மதிப்பை மறு மதிப்பீடு செய்ய வழிவகுக்கும் என்றும் ஸ்பார்க் கேப்பிடல் தெரிவித்துள்ளது.