மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மது அருந்த பெர்மிட் 58% அதிகரிப்பு… ஏன்?
காந்தி பிறந்த பூமியான குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மது அருந்த வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மது விற்பனை செய்ய 77 ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மது அருந்த லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவக் காரணங்களை காட்டி மது அருந்த அனுமதி பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்து இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மது அருந்த லைசென்ஸ் கேட்பது குஜராத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் மருத்துவக் காரணங்களுக்காக மது அருந்த லைசென்ஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 27,452 ஆக இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 43,470 ஆக அதிகரித்து இருக்கிறது.
இது 58% சதவீதம் அதிகரிப்பு. இதில் அகமதாபாத்தில் அதிகபட்சமாக 13,456 பேரும், தொழில் நகரமான சூரத்தில் 9,238 பேரும் மருத்துவக் காரணங்களை காட்டி மது அருந்த லைசென்ஸ் பெற்றுள்ளனர். காந்தி பிறந்த போர்பந்தரில் மது அருந்த 1,700 பேர் பெர்மிட் பெற்றுள்ளனர். மருத்துவக் காரணங்களுக்காக மது அருந்துவது அவசியம் என்று டாக்டர்களிடம் சான்று வாங்கி வந்தால் அந்த நபருக்கு மட்டும் மாநில கலால் வரித்துறை மது அருந்த பெர்மிட் வழங்குகிறது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் மது அருந்த அனுமதிக்கும் வகையில் பெர்மிட் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் தொழில் காரணங்களை கருத்தில் கொண்டு குஜராத்தில் இருக்கும் சர்வதேச ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் மது விலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச ஃபைனான்ஸ் சிட்டியில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் மது சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மது பாட்டில்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை. தூக்கமின்மை, பதற்றம், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் 40 வயதை தாண்டியவர்கள் மது அருந்த பெர்மிட் பெற்றுள்ளனர். குஜராத்தில் மது விற்பனையும் 20% அதிகரித்துள்ளது.