தொண்டையில் வலி.. சளி பிரச்னையா..? நிவாரணம் தரும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ
குளிர்காலம் மற்றும் பனிக்காலத்தில் நம் உடல்நலனில் பல பிரச்னைகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. இது போதாதென்று குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய காற்று மாசுபாடு நம் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதித்து நம்முடைய அன்றாட வேலையை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் இயல்பாகவே நம் தொண்டையில் சளி சேர்ந்துவிடக்கூடும். இந்த சளியை போக்கவும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் வீட்டு வைத்திய முறை சிறந்த நிவாரணமாக இருக்கிறது. அப்படியான சிறந்த 10 ஆயுர்வேத சிகிச்சை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
மெந்தால் ஆயில் : ஆயுர்வேத சிகிச்சை முறையில் பிரபலமாக இருக்கும் மெந்தால் ஆயில், மூக்கடைப்பையும் இருமல் தொல்லையையும் சரி செய்கிறது. மெந்தால் ஆயிலில் உள்ள குளிர்ச்சித்தன்மை தொண்டை வறட்சியை போக்குகிறது. மேலும் நாசி துவாரத்தில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி மூக்கடைப்பை சரி செய்வதிலும் மெந்தால் ஆயில் உதவியாக இருக்கிறது.
இஞ்சி : இஞ்சி நமது குழம்புகளுக்கு சுவையை அதிகரிப்பதோடு நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் அண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் வறண்ட தொண்டையை இதமாக்குவதோடு இருமலையும் குறைக்கிறது. மேலும் தொண்டையில் சேகரமாகியுள்ள சளியை குறைத்து சுவாசப் பாதையை சுத்தப்படுத்துகிறது.
அதிமதுரம் : இயற்கை மருத்துவத்தில் அதிமதுரத்திற்கு முக்கியமான இடமுண்டு. இனிப்பு மரக்கட்டை என அழைக்கப்படும் அதிமதுரம், தொண்டை வறட்சியையும் இருமலையும் குணப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது தொண்டையில் உள்ள சளியை போக்குகிறது. இதன் காரணமாக தொண்டை எரிச்சலும், வீக்கமும் சரியாகிறது.
யூகலிப்டஸ் ஆயில் : யூகலிப்டஸ் ஆயிலில் யூகலிப்டால் என்ற கலவை உள்ளது. இதற்கு மூக்கடைப்பையும் தொண்டையில் சளி உருவாவதை தடுக்கும் பண்புகள் உள்ளது. இந்த எண்ணெயை உங்கள் நெஞ்சுப் பகுதி, மூக்கு அல்லது கழுத்தில் தடவினால் இருமல் குறையும்.
துளசி : பண்டைய காலத்திலிருந்து மருத்துவ மூலிகையாக செயல்பட்டு வரும் துளசி, மூலிகையின் ராணி என அழைக்கப்படுகிறது. துளசியில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு தொற்றுகளை எதிர்த்தும் போரிடுகிறது. மேலும் துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வறட்சியை போக்க உதவுவதோடு இருமலையும் குறைக்கிறது.
நவச்சாரம் : காலம் காலமாக ஆஸ்துமா, இருமல், சளி ஆகியவற்றை குணப்படுத்த நவச்சாரம் உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பாதை தொற்றை குணப்படுத்த உதவுகிறது.
வெண்காரம் : ஆயுர்வேதத்தில் வெண்காரம் நமது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது. வெண்காரப் பொடி சளி, இருமல், வயிறு உப்புசம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. வெண்கார பஸ்ப பொடியை கொஞ்சமாக தேன் கலந்து தினமும் காலையில் குடித்தால் வறண்ட தொண்டையும் இருமலும் குணமாகும்.
தான்றிக்காய் : வறண்ட தொண்டை, சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த தான்றிக்காய் உதவுகிறது. இதில் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தினமும் தான்றிக்காய் பொடியை சாப்பிடுவதால் மூக்கு மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளி குறைக்கிறது.
சோமவல்லி : ஆயுர்வேத மருத்துவத்தில் இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை ஆகியவற்றை குணப்படுத்த சோமவல்லி மூலிகை பயன்படுகிறது. இதுதவிர மூச்சுக்குழாய் அழற்சி நோயை குணப்படுத்தவும் இந்த மூலிகை உதவுகிறது.