இருக்கும் வேதனைல இது வேறையா.. ஐசிசி வழங்கிய முக்கிய தண்டனை.. இந்தியாவுக்கு மெகா பின்னடைவு

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் நடைபெற்றது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த போட்டியில் ஆரம்ப முதலே திணறலாக செயல்பட்ட இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 101 ரன்களும் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 76 ரன்களும் எடுத்து போராடிய போதிலும் ரோகித் சர்மா போன்ற எஞ்சிய வீரர்கள் சுமாராக விளையாடியது தோல்வியை கொடுத்தது. அதே போல பந்து வீச்சு துறையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் போன்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

ஐசிசி தண்டனை:

மறுபுறம் டீன் எல்கர் தம்முடைய கடைசி தொடரில் சதமடித்து 185 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் ககிஸோ ரபாடா மற்றும் நன்ரே பர்கர் போன்ற பவுலர்கள் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தனர். அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் இந்தியா தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு இத்தொடரை வென்று ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக இந்தியா பந்து வீசியதாக நடுவர் கிறிஸ் ப்ராட் ஐசிசியிடம் புகார் செய்துள்ளார்.

அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி 2.22 விதிமுறையை மீறிய இந்திய அணியினருக்கு ஓவருக்கு 5% வீதம் மொத்தம் 10% போட்டிக்கான சம்பளத்திலிருந்து அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்கனவே பெற்றிருந்த புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தொடரின் துவக்கத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா இந்த தோல்வியால் ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளை தாண்டி 5வது இடத்திற்கு சரிந்தது. அந்த நிலையில் தற்போது 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளதால் 44.44% புள்ளிகளில் இருந்து கூடுதலாக புள்ளிகளை இழந்துள்ள இந்தியா 6வது இடத்துக்கு சரிந்து மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தத்தில் தோல்வியால் ஏற்கனவே வேதனையில் இருக்கும் இந்திய அணிக்கு இந்த அறிவிப்பு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *