இந்த 3 மாடல்களுக்கு தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா..! முழுவிபரம் இதோ
ஹோண்டா நிறுவனம் இந்த மார்ச் மாதம் தனது ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட செடான் கார்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது. ஆனால், முதல் முறையாக தனது எலிவேட் SUV மீதும் ஹோண்டா நிறுவனம் இந்த மாதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
நீங்கள் ஹோண்டா எலிவேட் வாங்க திட்டமிட்டிருந்தால் உண்மையில் இந்த மாதம் சரியானது. மேற்சொன்னது போல எலிவேட் எஸ்யூவி-க்கு நிறுவனம் முதல் முறையாக ரூ.50,000 தள்ளுபடியை வழங்குவதால் உங்களது பர்ச்சேஸிங் பிளானை செயல்படுத்த வேண்டிய மாதம் இதுவாக இருக்கலாம். ஹோண்டா நிறுவனம் வழங்கும் சலுகைகளில் நன்மைகளில் கேஷ் டிஸ்கவுண்ட்ஸ் அல்லது அக்சஸரீஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். இப்போது ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி, அமேஸ் மற்றும் எலிவேட் கார்களுக்கு மார்ச் 2024-ல் வழங்கும் சலுகைகளை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஹோண்டா எலிவேட்டில் ரூ.50,000 வரை சேமிக்கலாம்: இந்த மார்ச் மாதத்தில் எலிவேட் காருக்கு ரூ.50,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட்டை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும் இந்த தள்ளுபடி தொகை வேரியன்ட்டை பொறுத்து மாறுபடும். எலிவேட் மாடலுக்கு இந்த மாதம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது கார்ப்பரேட் ஆஃபர்கள் எதுவும் இல்லை. மாதத்திற்கு சராசரியாக 4,000 யூனிட்ஸ்களை விற்பனை செய்யும் ஹோண்டாவிற்கு SUV சிறப்பான விற்பனை செயல்திறனை பதிவு செய்து வருகிறது.
வசதியான மற்றும் விசாலமான கேபின், சிறந்த ரைட் மற்றும் ஹேண்ட்லிங்க் பேலன்ஸுடன் கூடிய சிறந்த SUV-யாக எலிவேட் இருக்கிறது. எலிவேட் 121hp, 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன்வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.58 லட்சம் முதல் 16.20 லட்சம் வரை இருக்கிறது.
ஹோண்டா அமேஸ் வாங்கினால் ரூ.90,000 வரை சேமிக்கலாம் : அமேஸ் மாடலுக்கு இந்த மாதம் வேரியன்ட் அடிப்படையில் ரூ.35,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.41,653 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்கள் கிடைக்கும். இதை தவிர ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ், ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரையிலான லாயல்டி போனஸ் உள்ளிட்டவையும் மார்ச் மாத சலுகையில் அடங்கும். கூடுதலாக அமேஸின் எலைட் ட்ரிமில் மட்டும் ரூ.30,000 வரை ஸ்பெஷல் எடிஷன் பெனிஃபிட் உள்ளது. இந்த காம்பேக்ட் செடான் 90hp, 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.16 லட்சம் முதல் 9.92 லட்சம் வரை இருக்கிறது.
ஹோண்டா சிட்டி வாங்கினால் ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம் : ஹோண்டா நிறுவனம் தந்து சிட்டி கார்களுக்கு வழங்கும் சலுகைகளில் ரூ.30,000 வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.32,196 வரை மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்களை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். ஹோண்டா சிட்டிக்கு வழங்கப்படும் சலுகைகளில் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ் மற்றும் ரூ.4,000 லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். கூடுதலாக, இதன் எலிகன்ட் டிரிமில் ரூ.36,500 வரையிலான ஸ்பெஷல் எடிஷன் பெனிஃபிட்டையும் , VS மற்றும் ZX டிரிம்களில் ரூ.13,651 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் (நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகள்) வழங்கப்படுகிறது.
சிட்டியின் ஹைப்ரிட் வேரியன்ட்ஸ்களுக்கு இந்த மாதம் சலுகைகள் எதுவுமில்லை. சிட்டி காரில் எலிவேட்டில் உள்ள 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதன் வசதியான சவாரி தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக பிரபலமாக உள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.71 லட்சம் முதல் 16.19 லட்சம் வரை இருக்கிறது.