இது தெரியுமா ? அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போட கூடாது..!
அமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்களை, பெற்றோர்களை முறையே வழிபட்டு வணங்கி ஆராதிக்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. அமாவாசை நாளில், பெற்றோர் இல்லாத கணவன் விரதமிருக்கலாம். அதேசமயம், கணவன் விரதம் இருக்கிறாரே, சாப்பிடாமல் இருக்கிறாரே என்று மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. கணவன் இருக்கும் போது அவர்களை சுமங்கலிகள் என்று சொல்வார்கள். சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் இருக்காமல் சாப்பிடவேண்டும். இன்னொரு விஷயம்… அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமாவாசை நாளில், காலையில் தர்ப்பணம் செய்யவேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். பின்னர், நம் முன்னோருக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து, அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, குடும்பத்துடன் வணங்கவேண்டும். பின்னர், காகத்துக்கு சமைத்த உணவு அனைத்திலிருந்தும் கொஞ்சம் எடுத்து வழங்கவேண்டும். இதன் பின்னர், இலையில் உணவு சாப்பிடவேண்டும். முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்கு பேருக்காவது உணவு வழங்கவேண்டும். இது, இருப்பதிலேயே மிகப்பெரிய புண்ணியம்.
இந்தநாளில், நாம் முன்னோரை நினைத்துச் செய்கிற எல்லாக் காரியங்களும் மும்மடங்கு பலன்களை நமக்கு வழங்கும் என்கிறது சாஸ்திரம். மாலையில் அவசியம் விளக்கேற்றவேண்டும். மீண்டும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து நம் முன்னோர்களையும் இறைவனையும் நமஸ்கரிக்கவேண்டும். அதேபோல், அமாவாசை அன்று இரவு தர்ப்பணம் செய்த கணவருக்கு டிபன் உணவுதான் கொடுக்கவேண்டும். மனைவியானவர், டிபனே சாப்பிட்டாலும் கொஞ்சம் கைப்பிடியேனும் சாதம் சாப்பிடவேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது தான், மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் முழுமையாக மருமகளுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது.
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.