வாஜ்பாயிடம் விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு..!
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ம் ஆண்டு “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை. அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இதனை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், ‘எனக்கு என்று சொந்தவீடு எதுவும் கிடையாது. தற்போது என்னுடைய மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் வசித்து வருகிறேன். மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு ரொம்ப நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.