மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது : முதல்வர் வழங்கினார்..!

சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் நிருபர் வி.என்.சாமிக்கு, ‘கலைஞர் எழுதுகோல்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் 12 பேருக்கு அரசு குடியிருப்புக்கான உத்தரவுகளையும் அளித்தார்.

இந்த விருது வழங்கும் விழா தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், துறையின் செயலர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி, முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது போன்ற விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 2021-22-ஆம் ஆண்டுக்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ.தர்மராஜ், மா.ராமலிங்கம் என்ற எழில் முதல்வன், 2022-23-ஆம் ஆண்டுக்கு பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், இரா.கலைக்கோவன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து பேருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2023-24-ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர்கள் ம.ராஜேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருக்கு குடியிருப்புக்கான நிர்வாக அனுமதி உத்தரவுகளையும் அவர் அளித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *