Health Alert: இந்த அறிகுறிகள் எல்லாம் யூரிக் அமில அதிகரிப்புக்கு காரணமா? பாத்து பதனமா இருங்க!
யூரிக் அமிலம் என்பது, நமது உணவு செரிமானத்தின்போது, பியூரின்கள் எனப்படும் சில உணவு மற்றும் பானக் கூறுகளை நம் உடல் உருமாற்றிய பிறகு எஞ்சியிருக்கும் கழிவுப் பொருளாகும். இந்த யூரிக் அமிலம் இரத்த ஓட்டத்தில் கரைந்து சிறுநீர் வழியாக நம் உடலை விட்டு வெளியேறுவது தான் இயற்கையான செயல்முறை. ஆனால் இந்த கழிவு வெளியேற்றம் பாதிக்கப்பட்டு, உடலில் அதிக யூரிக் அமிலம் தங்குவது அல்லது யூரிக் அமிலம் அதிக உற்பத்தி ஆகும்போது உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
சிறுநீரக செயல்பாடு குறையும் போதும், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிக அளவில் தங்கிவிடுகிறது. யூரிக் அமிலம் உடலில் தங்கிவிடும்போது, உடலில் பல்வேறுவிதமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமிலம் என்பது கீல்வாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது தான் பலருக்கும் பொதுவாகத் தெரியும் விசயம். ஆனால், உயர் இரத்த அழுத்தம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் இருதய நோய் என பல்வேறு இருதய நோய்களை அதிகரிப்பதிலும் யூரிக் அமிலம் பங்கு வகிக்கிறது.
உண்மையில் யூரிக் அமில அதிகரிப்பது என்பது உடலில் இருதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்பதைத் தெரிந்துக் கொண்டால், அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது சுலபம். அதுமட்டுமல்ல, அது எதனால் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துக் கொண்டு பெரிய பிரச்சனை ஏதேனும் ஏற்படுவதற்கான அறிகுறியா என்பதை தெரிந்து ஆபத்தை தவிர்க்கலாம். இல்லை உண்ணும் உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமா என்பதையும் அறிந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
யூரிக் அமில அறிகுறிகள்
கால்கள் மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் மாற்றங்கள் அதிக யூரிக் அமில அளவுகளை காட்டுகின்றன. யூரிக் அமிலத்தால் உடல் பாதிக்கப்படுவதை கால்கள் மற்றும் கைகள் காட்டிவிடும்.
மூட்டுவலி
மூட்டுகளில், குறிப்பாக கால்கள் மற்றும் கைகளில் ஏற்படும் வலி, அதிக யூரிக் அமிலத்தின் மிகவும் வெளிப்படையான அறிகுறியாக இருக்கலாம் என்பதும், இரவில் வலி அதிகமாகும் என்பதும் உடலில் யூரிக் அமில அதிகரிப்பிறிகான காரணமாக இருக்கலாம்.
அசாதாரண வீக்கம்
கை கால்களில் வீக்கம் ஏற்படுவது நடக்கும்போது சிரமமாக இருப்பது ஆகியவை உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
உடல்சூடு அதிகரிப்பு
கால்கள் மற்றும் கைகளில் வழக்கத்திற்கு மாறாக சூடாக இருந்தால், அது அதிகப்படியான யூரிக் அமிலத்தால் ஏற்படும் அறிகுறியாக இருக்கலாம்.
வீக்கம்
மூட்டுகள் மற்றும் கை கால்களில் வீக்கம் ஏற்படுவதும் யூரிக் அமில சுரப்பு அதிகரிப்பதை காட்டும் அறிகுறியாக இருக்கலாம்.
தொட்டால் வலி
கால்கள் மற்றும் கைகளில் தொட்டாலே வலி ஏற்பட்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
தூக்கம் குறைவது
கால்கள் மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் வலி மட்டுமல்ல, யூரிக் அமில அளவுகள் அதிகமாகும்போது இரவு உறக்கத்தில் பிரச்சனை ஏற்படும்
மரத்துப்போன உணர்வு
அதிக யூரிக் அமிலம் உடலில் இருந்தால், கை கால்களில் உணர்வின்மை அதாவது மரத்துப் போவது போன்ற உணர்வு ஏற்படும். அதேபோல, ஊசி குத்துவது போன்ற வலியும் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் உடலில் அதிக யூரிக் அமிலம் இருந்தால் ஏற்படும் அறிகுறிகளாக கூறப்படுகிறது. ஆனால், இவை வேறு ஏதேனும் பிரச்சனைக்கான காரணமா என்பதை மருத்துவர் தான் இறுதியாக உறுதிப்படுத்தமுடியும்.