ஐபிஎல் 2024 ஏலத்தில் சர்ஃபிராஸ்கானை எந்த அணியும் வாங்காதது ஏன்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்ஃபிராஸ்கான் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்ததார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த அவர், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். மூன்று அரைசதங்கள் விளாசிய சர்ஃபிராஸ்கான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடத்தை உறுதி செய்திருந்தாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா 20 ஓவர் தொடரில் விளையாடமாட்டார். அவரை ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த அணியும் வாங்க விருப்பம் காட்டவில்லை.
ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் நடைபெற்றிருக்குமானால் நிச்சயம் ஏதாவதொரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த அதிர்ஷடம் சர்ஃபிராஸ்கானுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். சர்ஃபிராஸ்கானை எந்த ஐபிஎல் அணியும் வாங்காமல் போனதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வென்ற பிறகு ஐபிஎல் 2024 ஏலம் நடந்ததால், அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சூழல் அவருக்கு சாதகமாக இருந்தது. இதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒருவேளை ஐபிஎல் ஏலம் நடந்திருந்தால் சர்ஃபிராஸ்கானுக்கும் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். அதேநேரத்தில் சர்ஃபிராஸ்கான் முந்தைய ஐபிஎல் ஆட்டத்தை பார்த்தால் எதுவும் சிறப்பாக இல்லை என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு திறமைகளை நிரூபிக்க தவறிவிட்டார். இப்போது சர்ஃபிராஸ்கானுக்கு 26 வயதாகிறது. ஆனால் 18 வயதில் இருந்தே சர்ஃபிராஸ்கான் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் போதுமான வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். அவர் மீது ஏதாவதொரு ஐபிஎல் அணி தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்திருக்குமானால், அவரும் இந்த வடிவத்தில் திறமையான பிளேயராக உருவெடுத்திருப்பார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். நான்கு வெவ்வேறு அணிகளில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சர்ஃபிராஸ்கான் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.