அடுத்த ஆண்டில் மெகா ஏலம் நடக்குமா? ஐபிஎல் நிர்வாகி கொடுத்த ட்விஸ்ட்.. தலைவலியில் சிஎஸ்கே அணி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நிச்சயம் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைமை நிர்வாகி அருண் துமால் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழலில், வெளிநாட்டு வீரர்களும் பயிற்சி முகாமில் பங்கேற்க வர தொடங்கியுள்ளனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்த வரை கான்வே காயம் காரணமாக விலகி இருந்தாலும், ரச்சின் ரவீந்திரா, மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்டோர் இருப்பதால், எந்த பின்னடைவும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணி, “டாடீஸ் ஆர்மி” என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வந்தது. 30 வயதிற்கு மேலான வீரர்களை வாங்குவதிலேயே சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டியது.
இதனால் அனுபவ வீரர்களே சிஎஸ்கே அணியில் நிரம்பி இருந்தனர். ஆனால் தற்போது சிஎஸ்கே அணி அதிகளவிலான இளம் வீரர்களை அணியில் கொண்டு வந்து பயிற்சி வழங்கியுள்ளதோடு, அவர்களை வழிநடத்த சரியான அனுபவ வீரர்களை கொண்டுள்ளது. தோனி, ஜடேஜா, ரஹானே, மொயின் அலி ஆகிய அனுபவ வீரர்கள் மட்டுமே சிஎஸ்கே அணியில் உள்ளனர்.
மற்றபடி தீபக் சஹர், முகேஷ் சவுத்ரி, பதிரனா, தீக்சனா, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, சமீர் ரிஸ்வி, கான்வே, ஷர்துல் தாக்கூர், ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே என்று ஒரு பெரும் இளம் படையை சிஎஸ்கே அணி பட்டை தீட்டி வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட கூடிய வீரர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் தேவையில்லை என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் சிஎஸ்கே ரசிகர்களின் எண்ணத்திற்கு மாறாக ஐபிஎல் தலைமை நிர்வாகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு மெகா ஏலம் நடப்பது நிச்சயம். ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். அதுதான் கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கும். ஐபிஎல் தொடரும் சிறப்பாக இருக்கும். அடுத்த மெகா ஏலம் நிச்சயம் இன்னும் பெரியளவில் இருக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதிய வீரர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.