வரி குறைப்பு கோரிக்கை: ராஜஸ்தானின் பெட்ரோல் நிலையங்கள் 2 நாள் வேலைநிறுத்தம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை பெட்ரோல் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் பொருளாளர் சந்தீப் பகேரியா, “ராஜஸ்தான் பெட்ரோல் டீலர்கள் சங்கம், அடுத்த 48 மணி நேரத்திற்கு “நோ பர்சேஸ், நோ சேல்” வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு அரசுதான் காரணம். வாட் வரி அதிகரிப்பால் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்ப் ஆபரேட்டர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.” என குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தானில் உயர்த்தப்பட்ட வாட் வரியால் பெட்ரோல் பம்ப் ஆபரேட்டர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், வாட் வரியை குறைக்க அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தானை விட அண்டை மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக டீலர்களின் கமிஷன் அதிகரிக்கவில்லை. இதனால், ராஜஸ்தானில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பம்புகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக சந்தீப் பகேரியா தெரிவித்தார். தங்களது சங்கத்தில் உள்ள 33 சதவீத டீலர்கள் பெட்ரோல் நிலையங்களை மூடும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெட்ரோல் விலை குறைப்பு வாக்குறுதியை உயர்த்தி பேசிய பகேரியா, பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ராஜஸ்தானில் பெட்ரோல் மீது அதிக வாட் வரி உள்ளது. அதனை குறைக்க வேண்டும். மற்ற மாநிலங்களின் பெட்ரோல் விலைக்கு இணையாக ராஜஸ்தான் மாநிலத்திலும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல் விலை மீதான வாட் வரியை உயர்த்தியது. அவை மீண்டும் திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.