ஆளுநரை சந்தித்து இ.பி.எஸ் புகார்..!
தமிழ்நாடு போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவருவதாகவும், போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும்.தமிழகத்தில் சர்வசாதாரணமாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. குட்கா குறித்து எங்கள் மீது பழி சுமத்தினர். இன்று அதை திமுக தடுத்து விட்டதா?. மடியில் கனம் இருப்பதால் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. தனக்கு கிடைத்த தகவலை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார், அதில் என்ன தவறு உள்ளது?”, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.