மாதம் ரூ.1 லட்சம் வருமானத்துடன் ஓய்வு பெற என்ன செய்ய வேண்டும்?
மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் வருமானத்துடன் ஓய்வுபெறும் வாய்ப்பு கிடைத்தால் யார் தான் வேண்டாமென சொல்வார்கள். ஆனால் இதுக்கெல்லாம் வாய்ப்பில்ல என்று தான் நமக்கு தோன்றும். ஆனால் முறையாக திட்டமிட்டு முதலீடு செய்யும்பட்சத்தில் நீங்கள் நினைத்த வயதில் குறிப்பிட்ட ஒரு ரொக்கத்துடன் எளிதாக ஓய்வு பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்காக நிபுணர்கள் வழங்கும் யோசனைகளை விரிவாக பார்க்கலாம்.
மிகப்பெரிய தொகையுடன் 40 முதல் 50 வயதுக்குள்ளாகவே ஓய்வு பெற வேண்டும் என்பது தற்போது பலரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் சரியான முதலீட்டு உத்தி இல்லாமல் இதனை நிறைவேற்ற முடியாது.
பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பிற முதலீடுகள் வாயிலாக நாம் நினைத்தபடி மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானத்துடன் ஓய்வுபெற முடியும் .படித்து முடித்து வேலைக்கு செல்ல தொடங்கும் காலத்திலேயே முதலீட்டை தொடங்கினால் சிறிய தொகை மூலமே நீங்கள் நினைத்த ரொக்கத்தை பெற முடியும்.
23 வயதாகும் ஒருவர் 40 வயதில் ஓய்வு பெற நினைக்கிறார், என்றால் அதற்கான தொகையை சேமிக்க அவருக்கு முதலீட்டு காலம் 17 ஆண்டுகள். எனவே 17 ஆண்டுகளில் சிறு சிறு தொகை பெரிய அளவில் வளரும்.
முன்னதாகவே ஓய்வுபெற நினைப்பவர்கள் முதலீட்டு உத்திகளில் தீவிரமான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும். அதாவது ஈக்விட்டி முதலீடுகளில் பெரும்பாலான தொகையை முதலீடு செய்தால் நினைத்த பணத்தை சேமிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
45 வயதிலேயே ஓய்வு பெற போகிறீர்கள் என வைத்து கொள்வோம். அடுத்த 30-40 வருடங்களுக்கு நீங்கள் வாழ்வதற்கு தேவையான தொகை உங்களிடம் இருக்க வேண்டும். ஏனெனில் 45 வயதுக்கு பின் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். எனவே பணவீக்கத்தை முறையாக கணக்கிட்டு சேமிப்பை திட்டமிட வேண்டியது அவசியம்.
எதிர்பாராத மருத்துவ செலவுகள் உங்கள் திட்டமிடலுக்கு இடையூறை ஏற்படுத்தும் எனவே மருத்துவ காப்பீடு செய்து அதனை தவிர்க்கலாம்.
ஒருவர் 40 வயதிலேயே ஓய்வுபெற விரும்புகிறார், 41ஆவது வயதில் இருந்து முதலீடுகள் வழியே 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க வேண்டும் என திட்டமிடுகிறார் என்றால், அவரிடம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபோர்ட்போலியோ இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த 4 கோடி ரூபாயில் 60 % முதலீடு என்பது பங்குச்சந்தை சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளாக இருக்க வேண்டும், 20 % கடன் பத்திரங்கள், 10 % தங்கம் போன்ற முதலீடுகள், 10% ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பிரித்து கொள்ள வேண்டும்.
இந்த முறையில் ஃபோர்ட்போலியோவை பிரித்து கொண்டால் அது நீண்ட காலத்திற்கு வளரக் கூடியது மற்றும் ஓய்வுகால பண வீக்கத்துக்கு ஏற்ப வருவாய் தரக்கூடியதாக இருக்கும் என நிபுணர்கள் விளக்கம் தருகின்றனர்.