பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் பகீர் சம்பவம்: தாக்குதல்தாரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன்!
லண்டனின் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
பக்கிங்ஹாம் அரண்மனை
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் நபர் ஒருவர் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என லண்டன் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை உடனடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் விபத்து நடந்ததற்கான காரணங்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
விபத்து ஏற்படுத்தியவருக்கு ஜாமீன்
விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து தீவிரவாத செயலுடன் தொடர்புடையது இல்லை என்றும் அவர் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பக்கிங்ஹாம் அரண்மனையின் பாதுகாப்பு மீறப்பட்ட சம்பவங்கள் இது முதல் தடவை அல்ல. துப்பாக்கி குண்டுகளை வீசிய நபர், அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் இடத்திற்குள் நுழைய முயன்ற நபர் என சமீப காலங்களில் அரண்மனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சிகள் நடந்துள்ளன.