1400 ஆண்டுகள்! உலகின் பழமையான நிறுவனம்.. அதுவும் இந்த ஊரில், எந்த பிஸ்னஸ் செய்கிறது தெரியுமா?
உலகில் தொடங்கப்பட்ட பல கம்பெனிகள் சில பல ஆண்டுகளுக்குள்ளேயே மூடுவிழாக்களை சந்தித்து விடுகின்றன. தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் தான் இதுபோன்று ஆகிவிடுகின்றது. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து நிலைக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியொரு கம்பெனி கோங்கோ குமி கோ லிமிடெட். (Kongō Gumi Co.) இது ஒரு ஜப்பானிய கட்டுமான கம்பெனியாகும்.
கிமு 578 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தான் உலகிலேயே மிகவும் புராதான கம்பெனியாகும். கோங்கோ குமி கோ ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரத்தில் இயங்கி வருகிறது. சந்தையில் இத்தனை ஆண்டு காலம் தாக்குப்பிடித்தது எப்படி என்ற ரகசியத்தை அந்தக் கம்பெனி இப்போது வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப் பழைய கம்பெனியாக இருந்து வந்த கோங்கோ குமி கோ பெருகி வரும் தொழில் போட்டிக் காரணமாக 2006ஆம் ஆண்டில் டாகாமாட்சு கன்ஸ்ட்ரக்ஷன் குரூப்பின் துணை நிறுவனமாக மாறியது. பாரம்பரிய கட்டடக்கலையில் நிபுணத்துவம் கொண்டது கோங்கோ குமி.
முக்கியமாக டிசைன், கன்ஸ்ட்ரக்ஷன், சீரமைப்பு, ஆலயங்களை செப்பனிடுதல், கோயில்கள், மாளிகைகள், கலாசார சிறப்புமிகு கட்டடங்கள் தொடர்பான கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது. ஒரு துணை நிறுவனமாக இப்போது மாறிவிட்டாலும் தொடர்ந்து பழங்கால முறைகளையே பின்பற்றி வருகிறது. குறிப்பாக பௌத்த கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டங்களையும் செப்பனிடுவதில் மும்முரமாக உள்ளது. ஒஸாகாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1400 வருடங்களாக ஒரு குடும்பத்தினரால் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஜப்பானில் காங்கிரீட்டையும் மரத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி ஆலயங்களைக் கட்டிவரும் முதல் கட்டுமானங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு வெறும் பயிற்சியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். இந்தப் பயிற்சிக் காலத்தில் யார் சிறப்பான வேலை நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றனர் என்பதை அறிய ஒருவருக்கொருவர் இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் களிமண்ணையும் மரத்தையும் சேர்த்து ஆலயக் கட்டுமானத்தை செய்பவர்களும் கண்டறியப்படுகின்றனர். இந்த அயராத பயிற்சிதான் கோங்கோ கோ நிறுவனத்தை இத்தனைக் காலம் கட்டுமானத் தொழிலில் தாக்குப் பிடிக்க வைத்துள்ளது.