சாதம், சப்பாத்தி, தோசைக்கு ஏற்ற சுவையான ‘மீன் குருமா’ செய்வது எப்படி.?

அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று மீன். மீன்களில் நாட்டு மீன் மற்றும் கடல் மீன் என இரண்டாக பிரிந்து பல வகை மீன்கள் உள்ளன.

பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் எந்த மீன் வாங்கினாலும் குழம்பு மற்றும் வறுவல் தான் செய்வார்கள். என்றாவது மீன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா. அப்படி இல்லையென்றால் இந்த ரெசிபி பதிவு உங்களுக்காக தான்.

இந்த மீன் குருமாவை நீங்கள் சாதம், இட்லி, சப்பாத்தி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். சுவைமிகுந்த இந்த மீன் குருமாவை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் – 1/4 கிலோ

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

புளி – அரை சிறிய நெல்லிக்காய் அளவு

அரைத்த தேங்காய் – 1/2 மூடி

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 3 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

சோம்பு – 3/4 டீஸ்பூன்

முந்திரி – 6

எண்ணெய் – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

அதன் பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதில் மூன்றாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறி கொள்ளுங்கள்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து மேலும் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இவை நன்றாக கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து சமைக்கவும்.

மீன் வெந்தவுடன் உங்கள் சுவைக்கேற்ப கரைத்த புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான ‘மீன் குருமா’ ரெடி…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *