தலைமுடிக்கு ஷாம்பூ போட்டதும் கண்டிஷனர் பயன்படுத்துவது ஏன் அவசியம்..?
தலைமுடி பராமரிப்பில் முக்கிய பொருளாக உள்ள கண்டிஷனர், நம்முடைய முடியின் ஆரோக்கியத்தை பேணுவது முதல், அதன் தோற்றம், எளிதாக கையாள்வது வரையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உச்சந்தலையை சுத்தப்படுத்துவது, அதிலிருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு ஆகியவற்றை அகற்ற ஷாம்பூ உதவினாலும், தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம், ஊட்டச்சத்து ஆகியவற்றை கண்டிஷனரே தருகிறது.
தலைமுடிக்கு ஷாம்பூ போட்டதும், ஏன் கண்டிஷனரை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
ஷாம்பூ போடுவதால் தலைமுடியில் இயற்கையாக உள்ள எண்ணெய் நீங்குவதால், முடிகள் வறண்டு, எளிதில் உடைவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் கண்டிஷனரை பயன்படுத்தும் போது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதோடு, முடி மென்மையாகவும் பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது.
கண்டிஷனரில் நம் முடிகளை சிக்கல் இல்லாமல் மென்மையாக மாற்றும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவை முடிகளில் சுருக்கம் ஏற்படுவதை குறைத்து உடைந்து போகாமல் பாதுகாக்கிறது. மேலும் தலைமுடியின் மேற்புறத்தை மென்மையாக்கி, ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்வதோடு நேர்த்தியாகவும் பாலிஷான தோற்றத்தையும் தருகிறது.
சீரான இடைவெளியில் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் எலாஸ்டிக் தன்மை மேம்படுகிறது. அதுமட்டுமின்றி முடித்தண்டுகளை வலுவூட்டி புரத இழப்பை குறைப்பதோடு பாதிப்படைந்த முடிகளுக்கு பளபளப்பையும் இழந்த வீரியத்தையும் மீட்டுக் கொடுக்கிறது.
புற ஊதாக் கதிர்கள், மாசுபாடு, ஹீட் ஸ்டைலிங் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து முடியின் தண்டுகளை பாதுகாத்து தடுப்பு அரணாக கண்டிஷனர் செயல்படுகிறது. இதன் மூலம் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் பிராகசமாகவும் இருக்கிறது.
கண்டிஷனர் பயன்படுத்திய தலைமுடியை மிக எளிதாக நமக்கு ஏற்ற வகையில் ஸ்டைலாக மாற்றிக்கொள்ள முடியும். மெல்லியதாகவும் நேராகவும் இருக்க வேண்டும் என விரும்பினாலோ அல்லது அடர்த்தியாக கொத்து கொத்தாக இருப்பது போல் வேண்டும் என்றாலும் அதற்கு கண்டிஷனர் உதவியாக இருக்கும்.
ஷாம்பூவை பயன்படுத்தும் போது உச்சந்தலை மட்டுமே சுத்தமாகும். ஆனால் கண்டிஷனர் பயன்படுத்தினால் உச்சந்தலையில் உள்ள எரிச்சலை நீக்கி, வறட்சியை போக்கி, அரோக்கியமான அளவில் Ph இருப்பதை ப்ரோமோட் செய்கிறது. இதனால் உங்களின் உச்சந்தலையில் ஏற்படும் தேவையற்ற அரிப்பு, நமச்சல், அசௌகர்யம் குறைகிறது.
தலைமுடிகளுக்கு வண்ணம் பூசியிருந்தால், நீண்ட நாள் அந்த வண்ணம் மங்கிப் போகாமல் இருக்கவும் பிராகாசமாக இருக்கவும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனிங் ஏஜெண்ட் என்ன செய்கிறதென்றால், முடியின் புறத்தோலை இறுக்கமாக பற்றிக்கொள்கிறது. இதன் காரணமாக தலைமுடியில் பூசப்பட்ட வண்ணம் வெளிரிப் போகாமல் அடுத்த டச்சப் கொடுப்பதற்கான காலத்தை நீட்டிக்கிறது. ஆகையால் உங்கள் தலைமுடி பராமரிப்பிற்கு கண்டிஷனரை பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருங்கள்.