பெங்களூரில் வேலை பார்க்க போறீங்களா? அங்கே பைக், கார் வாங்குறதுக்கு முன்னாடி இதை படிங்க! ரொம்ப கஷ்டம்
கர்நாடகாவில் வாகனங்களை பதிவு செய்வதை அதிக விலைக்கு மாற்றும் புதிய சட்டத்திற்கு கர்நாடக அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
கர்நாடக மோட்டார் வாகன வரிவிதிப்பு (திருத்தம்) சட்டம் 2024க்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மார்ச் 6 அன்று ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டம் மார்ச் 7ஆம் தேதி அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், போக்குவரத்து வாகனங்களுக்கு 3 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தப் பணம் கர்நாடக மோட்டார் போக்குவரத்து மற்றும் பிற அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதிக்குச் செல்லும்.
கூடுதலாக, மின்சார வாகனங்களுக்கு (EVs) வாழ்நாள் வரி விதிக்கும் அதிகாரம் இப்போது அரசாங்கத்திற்கு உள்ளது. எலக்ட்ரிக் கார், ஜீப், ஆம்னிபஸ் அல்லது தனியார் சர்வீஸ் வாகனம் ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், பதிவு செய்யும் போது அதன் விலையில் 10 சதவீதம் வரி விதிக்கப்படும். மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு இதுபோன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
தற்போது,நாட்டிலேயே அதிக சாலை வரிகள் பெங்களூரில்தான் உள்ளது. 13 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கர்நாடகாவில் ஏற்கனவே உள்ளது. போக்குவரத்து வாகனங்கள் மீதான புதிய 3 சதவீத வரி, சொந்தமாக வாகனம் வைத்திருப்பதை மேலும் விலையாக்கும்.
கர்நாடகா மோட்டார் போக்குவரத்து மற்றும் பிற தொடர்புடைய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம், 2024 அம்மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் சட்டம் போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக நடவடிக்கைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கேரேஜ்கள், பணிமனைகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்கள் போன்ற சில குழுக்களைத் தவிர்த்து, போக்குவரத்தில் பணிபுரிபவர்களுக்கு இது பொருந்தும்.
இந்த நிலையில் நீங்கள் கர்நாடகாவில் வேலை செய்ய சென்றால்.. அங்கே வாகனம் வாங்கும் பட்சத்தில் அதிக ரிஜிஸ்டிரேஷன் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.
நம்பர் பிளேட் விதிகள்: இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒரு HSRP ஆனது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது ஆன்லைனில் முடிக்கக்கூடிய எளிதான செயலாகும்.
இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹாலோ கிராம் ‘இந்தியா’ என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கும்.
அதேபோல் ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது பிப்ரவரி 17, 2024 க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது.