தொலைந்த பைக்-ஐ அரைமணி நேரத்தில் கண்டுபிடித்த வாலிபர்..!
பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியை சேர்ந்தவர் அருண்(24). இவர் தனது வீட்டின் எதிரே விலை உயர்ந்த உயர் ரக இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் பைக்கின் லாக்கை உடைத்து திருடி சென்றனர். இதனால் சத்தம் கேட்டு இளைஞரின் தாய் வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கரம் வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அருண் தனது செல்போனில் வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஜிபிஎஸ் செயலியில் வாகனத்தின் லொகேஷன் பூந்தமல்லி கடந்து வேலப்பன்சாவடியில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லொகேசனை டிராக் செய்து பின் தொடர்ந்து சென்றபோது மர்ம நபர்கள் மதுரவாயல் அருகே சர்வீஸ் சாலையில் திருடிய பைக்கை நிறுத்தி விட்டு அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றிருந்தனர். அப்போது அருண் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் பங்கில் திருடர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். அப்போது, அவர்களை திசை திருப்பி விட்டு வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தலை தெறிக்க அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதனை அடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், ஒருவன் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்வதும் மற்றொருவன் மின்னல் வேகத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் வருவதை கூட கவனிக்காமல் தப்பியோடிய காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தது. தனது தனது பைக்கை திருடி சென்ற நபர்களை ஜிபிஎஸ் செயலி உதவியுடன் வாகனம் திருடுபோன அரை மணி நேரத்தில் இளைஞரே கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பந்தமாக பூந்தமல்லி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.