உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய தலம்..!
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்யம் மகரிஷி. அகத்தியர், பைரவர், வசிஷ்டர் போன்ற மகரிஷிகளின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர் இவர். இவருடைய தவப்பலன்கள் அனைத்தும் இவரது உள்ளங்கையில் இருந்தது. திருமணப்பத்திரிகைகளில் மாங்கல்ய தேவைதைகள் பறப்பது போன்று அச்சிடுவார்கள். அந்த தேவதைகளுக்கெல்லாம் குருவாக விளங்கியவர் மாங்கல்யம் மகரிஷி.
திருமண நேரமான சுபயோக அமிர்த நேரத்தில் யாரும் அறியாமல் சூட்சும வடிவத்தில் இத்தலத்தில் வீற்றிருக்கும் மாங்கல்யேஸ்வரரை வணங்குவதாக ஐதிகம். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருக்கிறது. அதனாலேயே இத்தலத்தில் வீற்றிருக்கும் தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் அனைத்தும் பங்குனி உத்திரத்தன்று வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன.
இத்தலத்து மூலவர் மாங்கல்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் மங்களாம்பிகை. இவள் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். பிரகாரத்தில் மாங்கல்ய மகரிஷி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனார், அர்த்த நாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டி கேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் குலதெய்வ கோவிலில் பத்திரிகை வைத்து பிறகு இங்கிருக்கும் மாங்கல்ய மகிரிஷியிடம் பத்திரிகை வைத்து திருமணத்தை நல்லபடியாக நடத்திக்கொடுக்க வேண்டுகிறார்கள் பக்தர்கள். உத்திர நட்சத்திர பெண்களுக்குத் திருமணத்தடைகள் ஏற்பட்டால் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நிச்சயமாகும். பிறகு கணவருடன் தம்பதியராக வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். திருமணத்துக்கு பின்பும் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். குடும்ப ஒற்றுமை, பிணி தீர்க்கும் தலமாக மாங்கல்யேஸ்வரர் தலம் விளங்குகிறது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் தங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள மாங்கல்யேஸ்வரரை வழிபடலாம். நேரம் கிடைக்கும் போது அல்லது நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று இத்தலத்துக்கு வந்து வழிபட்டு வாழ்வை வளமாக்கி கொள்ளலாம்.