பங்கின் விலை சரியும் போது.. ஏன் முதலீடு செய்ய வேண்டும்..? எதில் முதலீடு செய்ய வேண்டும்..?
சாமானிய மக்கள் பார்வையில் பங்குச் சந்தை என்பது பங்குகளை வாங்கி விற்பனை செய்யும் ஒரு தளமாக இருக்கிறது. ஆனால் பங்குகளை எப்போது வாங்குவது மற்றும் விற்பது என்ற பல நுணுக்கங்களை வழிநடத்துவது ஒரு கலையாகும். இதற்கு ஒரு பங்கின் சாத்தியக்கூறுகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. முதலீட்டாளர்கள் அடிக்கடி செய்யும் ஒரு பொதுவான தவறு என்னவென்றால், விலை உயர்ந்து கொண்டிருக்கும் பங்குகளை வாங்குவது.
உதாரணமாக ஒரு பங்கை அதன் 52 வார உயர் விலையில் வாங்குவது லாபம் ஈட்டும் திறனை குறைக்கும் என்று நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால் அடுத்தடுத்து அந்த பங்கின் விலை கணிசமாக சரிய வாய்ப்புள்ளது. இதனால் தான் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் பொதுவாக நல்ல நிதிநிலை, சிறப்பான சந்தை மதிப்பீடு கொண்ட பங்குகள் கணிசமான விலை சரிவை சந்தித்த பங்குகளில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர்.
பல அனுபவமிக்க முதலீட்டாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த பழைய உத்தியில் ஒரு சிக்கலும் உள்ளது. ஒரு பங்கின் மிகக் குறைந்த விலையை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. ஒரு பங்கின் விலை எந்த அளவுக்கு குறையும் என்று உறுதியாக கூற முடியாது. ஒரு பங்கு அதன் குறைந்த மட்டத்தில் இருக்கும்போது, நிறுவனத்தின் வரலாற்று செயல்திறன் மற்றும் அதன் முந்தைய குறைந்த விலை போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் அடிக்கடி முதலீடு செய்கின்றனர்.
இருப்பினும் ஒரு பங்கு தொடர்ந்து வீழ்ச்சியடையும்போது குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பங்கு வீழ்ச்சி அடையும் போதெல்லாம் முதலீட்டளார்கள் பீதி அடைய தேவையில்லை என முதலீட்டு ஆலோசனை நிறுவனமான வெக்டர் வெஸ்ட் கூறியுள்ளது. சந்தை வீழ்ச்சியடையும்போது வலுவான பங்குகள் கூட பாதிக்கப்படலாம், சரிவை சந்திக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் அவசரமாக பங்குகளை விற்பனை செய்யக் கூடாது.
இந்த பங்குகள் அவற்றின் அசல் விலைக்கு மீண்டும் வரலாம், கணிசமான லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தது. வெக்டர் வெஸ்ட் நிறுவனத்தின் கருத்து புகழ்பெற்ற வாரன் பபெட்டின் தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. அதாவது பங்கு விலை கீழ்நோக்கி செல்லும் பாதையில் இருந்தால் அது வாங்குவதற்கு உகந்த நேரத்தை அளிக்கிறது, பெரும்பாலும் குறைந்தபட்ச கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.
அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் உத்திகளுடன் இணைந்து, கணிசமான சரிவை சந்தித்த பங்குகளின் திறனை உணர்ந்து, சந்தை எற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பொறுமையை கடைப்பிடிப்பது நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.