IPL 2024: மும்பை அணிக்கு பின்னடைவு! ஹர்திக் தலைமையில் ரோஹித் விளையாட போவதில்லை?

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் ஐபிஎல் 2024 போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர். மார்ச் 22ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகிறது.

தரம்சாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். முதுகுவலி இருப்பதாக கூறிய பீல்டிங் செய்ய வராத ரோஹித் ஷர்மா கோப்பையை வாங்க மட்டும் வந்து இருந்தார். இருப்பினும், ரோஹித் ஷர்மாவின் காயம் குணமடைந்துவிட்டதா என்ற அப்டேட் எதுவும் பிசிசிஐ வெளியிடவில்லை. இந்த காயம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா ஐபிஎல் 2024ஐ இழக்க நேரிடும். இருப்பினும், ஐபிஎல் 2024ல் விளையாடுவது குறித்து ரோஹித் ஷர்மா குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் சர்மா விளையாட முடியாமல் போனால் அது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்த கூடும். இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இரண்டு வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஒருமுறை கோப்பையையும், ஒருமுறை பைனல் போட்டிக்கு தனது அணியை அழைத்துச் சென்றார். தனது திறமையான கேப்டன்சி மூலம் அனைவரையும் கவர்ந்த ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.

மும்பை அணியின் கேப்டனாக இருந்து ஐந்து முறை கோப்பையை பெற்று தந்த ரோகித் சர்மா இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணி ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடி வந்தது. பிளே ஆப்களுக்கு கூட தகுதி பெற முடியாமல் தடுமாறியது, இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் 2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் தனது அணியில் இருந்த முக்கிய வீரர்கள் தவறவிட்டது. இதனால் இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோஹித் சர்மா விளையாட வேண்டிய சூழல் உள்ளது. ஒருவேளை காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாடாமல் போனால் அது மும்பை அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *