சென்னை டூ தரம்சாலா.. அஸ்வினுக்காக பேனருடன் வந்த இளைஞர்கள்.. நேரில் அழைத்து வாழ்த்திய ஸ்பின் மாஸ்டர்!
இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்து சென்ற 2 இளைஞர்களையும், அஸ்வின் சந்தித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதுமட்டுமல்லாமல் தனது 100வது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளையும் அள்ளி இருக்கிறார். 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அனில் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகள் அஸ்வினுக்கு சரியாக அமையவில்லை. 3வது டெஸ்ட் போட்டியின் போது பவுலிங் ஃபார்முக்கு திரும்பிய நிலையில், அம்மாவின் உடல்நிலை காரணமாக அவசர அவசரமாக சென்னைக்கு திரும்பினார். பின்னர் 24 மணி நேரத்தில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தாலும் பெரியளவில் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை.
ஆனால் 5 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நேரில் ஆதரவு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 2 இளைஞர்கள் தரம்சாலா பயணம் மேற்கொண்டனர்.
டெஸ்ட் போட்டியின் போதே அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளோம் என்று பேனர் காட்டி பலரின் கவனத்தையும் 2 இளைஞர்கள் ஈர்த்தனர். இந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து சந்தித்துள்ளார்.
சச்சின் மற்றும் முகேஷ் ஆகிய 2 இளைஞர்களையும் நேரில் சந்தித்த அஸ்வின், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஆட்டோகிராஃப் அளித்த அஸ்வின், அவர்களுக்கு நன்றி கூறினார். அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக 2 பேரும் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து தரம்சாலா சென்றுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரையும் அஸ்வின் சந்தித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.