கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றிக்கு 2 ரன்கள் தேவை.. டெல்லி கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் நின்ற ரிச்சா கோஷ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கடைசி பந்தில் வென்று ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அசாத்தியங்களை சாத்தியமாக்கி வருகின்றனர் கிரிக்கெட் வீராங்கனைகள். 17வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஜோடியாக லேனிங் – ஷஃபாலி வர்மா கூட்டணி களமிறங்கியது.

கேப்டன் மெக் லேனிங் அடக்கி வாசிக்க, அதிரடியாக எகிறினார் ஷஃபாலி வர்மா. முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ஷஃபாலி வர்மா 23 ரன்களிலும், தொடர்ந்து லேனிங் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இணைந்த ரோட்ரிக்ஸ் – கேப்ஸி கூட்டணி 3வது விக்கெட்டுக்கு பொளந்து கட்டியது. அதிரடியாக ஆடிய ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரைசதம் விளாசி அசத்தினார்.

சிறப்பாக ஆடிய அவர் 36 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 58 ரன்களும், கேப்ஸி 32 பந்துகளில் 8 பவுண்டரி உட்பட 48 ரன்களும் சேர்த்து வெளியேறினர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஸ்ரேயாங்கா பாட்டீல் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா – சோஃபி இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பை நட்சத்திர வீராங்கனையான எல்லீஸ் பெர்ரி எடுத்து கொண்டார். எல்லீஸ் பெர்ரியின் அதிரடியான ஆட்டம் காரணமாக ஆர்சிபி அணி 10 ஓவர்களிலேயே 81 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பெர்ரி 49 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, தொடக்க வீராங்கனை சோஃபியும் 33 ரன்களில் வெளியேறினார்.

இதனால் ஆட்டத்தில் டெல்லி அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் சோஃபி டெவின் – ரிச்சா கோஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இருவரும், 15வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட, ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 3 ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

அப்போது டெவின் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பொறுப்பை ரிச்சா கோஷ் எடுத்து கொண்டார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தது. ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட, 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரும் விளாசப்பட்டது.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரிச்சா கோஷ் முதல் ரன்னை எடுக்க ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார். 29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 51 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷ், ஆர்சிபி அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று கண்ணீர் சிந்தினார். இதனையடுத்து அவருக்கு டெல்லி அணியின் ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆறுதல் கூறினார். இந்த வெற்றியின் மூலமாக டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *