தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அந்த தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தேர்தல் பத்திரங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் மாதம் வரை அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க கால அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ. வங்கியின் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எஸ்பிஐ வங்கி நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், மார்ச் 15ஆம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர் மற்றும் நன்கொடை மதிப்பு ஆகியவற்றை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தகவல்களை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்கும்போது அதை வெளியிட்டுத்தான் ஆக வேண்டும் என காட்டம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடும் உத்தரவை செயல்படுத்த தவறினால் எஸ்.பி.ஐ அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.