காமராஜரின் பெயரை சொல்லி பிச்சை எடுக்கும் காங்கிரஸ், கமலஹாசனை திமுக கூட்டணியில் சேர்த்தது ஏன்? குஷ்பு ஆவேசம்

வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் ஏ.சி.எஸ் குழுமம் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தில் இலவச மருத்துவமனை, இலவச திருமண மண்டபம், இளைஞர்கள் பயிற்சி மையம் ஆகியவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக அகில இந்திய துணை தலைவர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேசுகையில், போதை பொருளால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில் பாஜக மற்றும் ஏ.சி.சண்முகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திமுக தினம் தினம் பயத்திலேயே இருக்கின்றனர். இன்றைக்கு என்ன பிரச்சணை வெளி வருமோ என்று, காரணம் அவர்கள் தவறு செய்ததால் பயப்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் பயம் இருக்க தான் செய்யும் அதனால் தான் திமுகவினர் பயப்படுகின்றனர்.

கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. பல துறைகளில் உலகளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. 1967க்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் தற்போது வரை சொந்த காலில் நிற்க முடியாததன் காரணம் என்ன? தற்போது வரை காங்கிரஸ் காமராஜரின் பெயரை சொல்லி தான் பிச்சை எடுக்கிறது. திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி சேர்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டியது தானே என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்டவை தனி அதிகாரத்தோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கு சோதனை நடத்தினாலும், அரசியல் பழிவாங்கும் நிகழ்வு என குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து முதல்வர், பல்வேறு அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது தான் குற்றவாளி பிடிபட்டுள்ளார். இனி தான் ஒவ்வொரு பெயராக வெளிவரும் என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *