அருண் கோயல் பதவி விலக காரணம் இதுதானா?
காலியாக இருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர் பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தேர்தல் ஆணையர் பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில், தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட சமயத்தில், உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்து அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவர், மத்திய அரசால், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தான் அதற்கு காரணமாக இருந்தது.
இப்படி சர்ச்சைக்கு நடுவே தேர்தல் ஆணையராக பதவிக்கு வந்த அருண் கோயல், தற்போது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே பதவி விலகி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
உடல் நிலையை காரணம் காட்டி அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகச் சொன்னாலும், உண்மையில் அவர் நல்ல உடல் தகுதியுடன் தான் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன், அருண் கோயலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அருண் கோயல் வெளியேறி விட்டார். இதுதொடர்பாக அன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், உடல் நலக் குறைவு காரணமாக அருண் கோயல், அவசரமாக சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த 7ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருடன், ராஜிவ் குமார் பங்கேற்றார். எனினும், கடந்த 8ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர் உடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அருண் கோயல் பங்கேற்கவில்லை. அன்றைய தினமே தனது பதவி விலகல் கடிதத்தையும் குடியரசுத் தலைவருக்கு அருண் கோயல் அனுப்பி விட்டார். தற்போது வரை எந்த காரணத்திற்காக தலைமைத் தேர்தல் ஆணையருடன், அருண் கோயலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது என தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை….
ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயல், பதவி விலகல் கடிதம் அனுப்பிய மறுநாளே அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.
இதனிடையே, புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழுக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். மற்றொரு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே, கடந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்.
தற்போது தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து அவர் மட்டுமே முடிவெடுப்பாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு கூட்டம், வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கி வைத்துவிட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சரை இடம்பெற செய்யும் வகையிலான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரும், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கலந்து கொள்கின்றனர்.