ரேபிடோ பைக் டாக்சி.. மீண்டும் பெங்களூரில் வெடித்த பிரச்சனை..!
பெங்களூரில் ரேபிடோ பைக் டாக்சிகளைப் பயன்படுத்தவிடாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியதாக ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், நகரத்தில் உள்ள மெட்ரோ நிலையங்களுக்கு வெளியே இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த நிறையபேர் இதுபற்றி சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை ஜலஹள்ளி மெட்ரோ நிலையத்துக்கு வெளியே ரேபிடோ பைக் டாக்சியைப் பயன்படுத்த முயன்ற வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தகராறு செய்துள்ளனர். அவரை ரேபிடோ பைக் டாக்சியைப் பயன்படுத்தக்கூடாது என்று வலுக்கட்டாயமாக எதிர்த்துள்ளனர். இந்த சம்பவம் ஜலஹள்ளி மெட்ரோ நிலையத்துக்கு வெளியே நடந்தது.
இப்படி ரேபிடோ பைக் டாக்சியைப் பயன்படுத்த விடாமல் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் செயல் ஒரு “குண்டர் நடத்தை” என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அவர் ரேபிடோ பைக் சவாரியை புக் செய்து எலக்ட்ரிக் பைக் டாக்சி வந்தபோது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரிடம் தகராறு செய்து பைக் டாக்சியை திருப்பி அனுப்பியுள்ளனர்.
பெங்களூருவில் எலக்ட்ரிக் பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேபிடோ எலக்ட்ரிக் பைக் டாக்சியை இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பதாக பாதிக்கப்பட்டவர் நினைத்து விட்டார். இதனால் மீண்டும் ரேபிடோ புக் செய்தபோது அப்போதும் எலக்ட்ரிக் பேக் வந்ததால் தகராறு ஏற்பட்டதால் சவாரியை ரத்து செய்து விட்டு மூன்றாவது முறையாக புக் செய்தார்.
அப்போது எலக்ட்ரிக் பைக்குக்கு பதிலாக பெட்ரோலில் இயங்கும் ஹோண்டா பைக் டாக்சி வந்தது. ஆனால் இந்த முறையும் ஆட்டோ ஓட்டுநர்கள் வம்பு செய்து அந்த டாக்சியை திருப்பி அனுப்பிவிட்டனர். வந்தது சாதாரண பைக் தானே ஏன் விரட்டுகிறீர்கள் என்று பாதிக்கப்பட்ட அதிகாரி கேட்டபோது, எங்களிடம் ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது.
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடாவடியாகப் பேசியுள்ளனர். இதன் பின்னர் அவர் வேறு வாகனத்தை ஏற்பாடு செய்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக இந்த தகராறை பாதிக்கப்பட்டவர் விடியோ பிடிக்க முயன்றபோது அதையும் ஆட்டோ ஓட்டுநர்கள் தடுத்து விட்டனர். இந்த சம்பவத்தை பெங்களூரு போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர்.