ஷூ வாங்க கூட பணமில்லை.. அவர்தான் ஷூ கொடுத்து பவுலிங் செய்ய கற்றுக் கொடுத்தார்.. நெகிழும் தாக்கூர்!
மும்பை அணியின் அனுபவ வீரர் தவால் குல்கர்னி தான் ஷூ வாங்குவதற்கு கூட பணமின்றி தவித்த போது உதவியதாக இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர், அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 69 பந்துகளில் 3 சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 75 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய விதர்பா அணி வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மும்பை அணியின் அனுபவ வீரர் தவால் குல்கர்னி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த, மற்றவர்கள் சீட்டு கட்டை போல் சரிந்தனர். இதன்பின் 2வது இன்னிங்ஸில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல் தவால் குல்கர்னியின் கடைசி ரஞ்சி டிராபி போட்டி இதுவாகும். ஓய்வை அறிவித்த நிலையில், மும்பை அணியின் சக வீரரான ஷர்துல் தாக்கூர் உணர்வுப் பூர்வமாக பேசி இருக்கிறார். ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியின் 2வது நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஷர்துல் தாக்கூர் பேசுகையில், இதுதான் தவால் குல்கர்னியின் கடைசி முதல்தர போட்டி. இது அவருக்கு மட்டுமல்லாமல் எனக்கு எமோஷனலான தருணம் தான்.
ஏனென்றால் சிறுவயதில் இருந்தே தவால் குல்கர்னி எனக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்தவர். பவுலிங் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் அவர் தான். ஷூ வாங்குவதற்கு பணமின்றி தவித்த போது, அவர் சொந்தமாக வைத்திருந்த 2 செட் ஷூக்களை எனக்கு கொடுத்து உதவி செய்தார். அதுதான் எனது பயிற்சிக்கு உதவியது. அதேபோல் கடினமான சூழல்களில் விளையாட எனக்கு எப்போதும் பிடிக்கும்.
மகாராஷ்டிராவில் ஒரு பகுதியில் உள்ள பல்காரில் இருந்து ரயிலில் கிட் பேக்குடன் மும்பைக்கு பயிற்சி செய்ய வருவேன். அது எவ்வளவு கடினம் என்று நன்றாக அறிவேன். அதுதான் எனது பிடிவாதத்திற்கு காரணமாக மாறியது. எந்த கடினமான சூழலை சந்தித்தாலும், நான் மாறப் போவதில்லை. சிறு வயதிலேயே அதற்காக தயாராக தொடங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.