ஒரு வழியாக ஃபார்முக்கு வந்த சிஎஸ்கே வீரர்.. தோனியின் ஒரு சிக்கல் க்ளோஸ்.. சென்னை ஃபேன்ஸ் மகிழ்ச்சி!
சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்திருப்பது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 224 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய விதர்பா அணி 105 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதனால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸ் 119 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹாமே, அரைசதம் விளாசி அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் 2வது நாளினை நிறைவு செய்துள்ளார் ரஹானே.
இதன் மூலம் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். சரியாக ஐபிஎல் தொடருக்கு 10 நாட்கள் இருக்கும் போது ரஹானே ஃபார்முக்கு திரும்பியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில் நம்பர் 3 வரிசையில் களமிறங்கிய ரஹானே, பல்வேறு அசாத்தியமான இன்னிங்ஸ்களை விளையாடினார்.
குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான மும்பை மண்ணில் ஆடிய ஆட்டம் சிஎஸ்கே அணியின் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. இந்த ரஞ்சி சீசனில் அஜிங்கியா ரஹானே 6 போட்டிகளில் விளையாடி 115 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால் இறுதிப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் அரைசதம் விளாசி கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.
வழக்கமாக பயிற்சிக்கு முதல் வீரராக வரும் ரஹானே, ஒருநாள் கூட பயிற்சியை மிஸ் செய்ததில்லை. இந்த ஃபார்ம் அவுட் குறித்து ரஹானே பேசுகையில், கிரிக்கெட் வீரர்கள் ஃபார்முக்கு வருவது எப்படி ஒரு இயல்போ, அதேபோல் தான் ஃபார்ம் அவுட்டாதும் இயல்பு தான். இதனால் வீரர்கள் கவலை கொள்ள தேவையில்லை. அடிப்படைகளை சரியாக செய்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.