IPL 2024 : இனி நேரடி டிக்கெட் கிடையாது.. சிஎஸ்கே அணி நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி.. காரணமே இதுதான்!

நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்து நேரடியாக விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் எந்தவொரு போட்டிக்கும் எளிதாக டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும், டிக்கெட் விற்பனையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கும் பிசிசிஐ நிர்வாகம், உலகக்கோப்பை ஃபார்முலாவையே பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து நட்சத்திர அணியான ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் ஓராண்டுக்கு பின் தோனியை மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் காண ஆர்வமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் விண்டேஜ் ஹேர்ஸ்டைலில் தோனி களமிறங்கவுள்ளதால், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனால் பலரும் ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கடந்த சீசனிலேயே பெண்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை இருந்தது. இதனால் தங்கள் வீட்டு பெண்களை வரிசையில் நிறுத்தி ரசிகர்கள் பலரும் டிக்கெட்டை பெற்று வந்தனர். அதேபோல் கள்ளச்சந்தையிலும் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சக்கைபோடு போட்டது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக மட்டுமே செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடாளுமன்றத் தேர்தலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

பே-டிஎம் இன்சைடர் செயலி மூலமாக சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டை ரசிகர்கள் பெற முடியும் என்றும், டிக்கெட் விற்பனைக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *