IND vs ENG : அவருக்கு எனக்கு ஒரு பெரியண்ணே மாதிரி.. அந்த ஸ்பீச்சை மறக்க முடியாது.. அஸ்வின் பேச்சு!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அண்ணனை போன்றவர் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இதனையொட்டி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில் மனம் திறந்துள்ளார். அதில் அஸ்வின் பேசுகையில், எனது 100வது டெஸ்ட் போட்டிக்கு இப்படியான ஒரு வரவேற்பும், வாழ்த்தும் இருக்கும் என்று நினைத்ததில்லை.
எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் விளையாடுவேன். ரசிகர்களுக்காகவோ, கொண்டாட வேண்டும் என்பதற்காகவோ விளையாடாமல், எனக்காகவே விளையாடி இருக்கிறேன். ஆனாலும் இந்த 100வது போட்டிக்கு எனக்கு கிடைத்த வாழ்த்துகள் நெகிழ வைத்துவிட்டது. மைதானத்திற்கு பலரும் எனக்காக நேரில் வந்ததாக கூறினார்கள்.
100வது டெஸ்ட் போட்டி எனக்கு மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என்று அனைவரும் ஸ்பெஷலாக உணர்ந்தார்கள். இந்த போட்டிக்கு முன் ராகுல் டிராவிட் ஒரு ஸ்பீச் ஒன்றை கொடுத்து எனக்கு 100வது டெஸ்ட் கேப்பை கொடுத்தார். அந்த ஸ்பீச்சை என்னால் மறக்க முடியாது.
ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தாலும், 2014ஆம் ஆண்டு வரை தெருக்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ராமகிருஷ்ணா நகர் அண்டர் ஆம் அசோசியேஷன் என்று ஒரு அணியை வைத்திருந்தோம். அந்த அணி சார்பாக கிரிக்கெட் தொடர்களை நடத்தி இருக்கிறோம். அதனையெல்லாம் ராகுல் டிராவிட் தொட்டு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு வீரராகவும் ராகுல் டிராவிட் உடன் விளையாடி இருக்கிறேன். ஆனால் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வேறு மாதிரி உணர்வை கொடுக்கிறார். ஒரு பெரியண்ணனை போல் உணர வைத்துவிட்டார். அவருடன் நான் எந்த கருத்தையும் கூறி ஆலோசிக்க முடியும். அந்த அளவிற்கு எனக்கும் அவருக்குமான உறவு உள்ளதாக நெகிழ்ந்துள்ளார்.